இசை கேட்பது ஹராமா? - இஸ்லாமிய பார்வையில் இசை
Ashfaaq Reshard |
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
இசை பற்றிய பல ஆய்வுகள் கட்டுரைகள் இருந்தாலும் இசை சம்பந்தமாக ஆய்வு செய்து இங்கு எழுதவேண்டிய நிலை ஏற்பட்டதற்கு காரணம் எந்த ஒரு உலமாக்களின் சொற்பொழிவுகளிலும் மற்றும் ஆய்வுகளில் அல்லது கட்டுரைகளில் இசை சம்பந்தமாக முழுமையான ஆய்வு செய்யப்படவில்லை அல்லது தெளிவாக பிரித்து சொல்லப்படவில்லை.
இசை சம்பந்தமான கட்டுரைகளில் இசை சம்பந்தமான ஹதீஸ்கலை பதிவு செய்துவிட்டு இசை ஹராம் என்று கட்டுரையை முடிக்கிறார்கள் ஒளிய அது சம்பந்தமான சட்டங்களை பிரித்து தெளிவு படுத்தப் படுவதில்லை.
பிரித்து தெளிவுபடுத்த படுவதில்லை என்று நான் குறிப்பிட்டதற்கான காரணம் பன்றி ஹராம் என்றதும் நம் சமூகத்தினர் பன்றியின் பெயரை குறிப்பிடுவதை ஹராமாக்கி கொண்டுள்ளனர் பன்றி ஹராம் என்பதை பற்றிய ஒரு ஆய்வு வெளியிடுவதாக இருந்தால் அதில் பன்றி ஹராம் என்பதற்கான ஆதாரங்களை முன் வைத்துவிட்டு பன்றி ஹராம் என்று கட்டுரையை முடிப்பதனால் ஆய்வு முழுமை பெறாது பன்றி ஹராம் என்றால் பன்றி உண்பதுதான் ஹராம் பன்றி என்ற வார்த்தையை சொல்வதோ அல்லது பன்றியை பார்ப்பதோ ஹராம் அல்ல என்பதை பிரித்து தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
அதேபோன்று இசை ஹராம் என்றால் இசை கருவிகளை பயன்படுத்துவது ஹராமா அல்லது இசை கேட்பது ஹராமா என்பதை பிரித்து தெளிவுபடுத்தப்பட வேண்டும். அந்த அடிப்படையில் இசை சம்பந்தமாக வரக்கூடிய ஹதீஸ்களை பார்த்தால் அவைகள் இசைக் கருவிகளை பயன்படுத்துவதை தான் தடைசெய்துள்ளது என்பதை நாம் அவதானிக்கலாம். இசை கேட்பதை இஸ்லாம் தடை செய்ததற்கான எந்த ஒரு ஸஹீஹான ஆதாரமும் இல்லை.
இசை சம்பந்தமாக வரக்கூடிய அனேகமான செய்திகள் பலவீனமானவை என்பதை முதலில் நினைவுபடுத்த விரும்புகிறேன். தற்போது இசை சம்பந்தமாக வரக்கூடிய ஸஹீஹான ஹதீஸ்களை பார்ப்போம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் உங்களுக்கு மதுவையும், சூதாட்டத்தையும், #மத்தளத்தையும்_தடை_செய்துள்ளான். போதையூட்டக் கூடிய அனைத்தும் தடை செய்யப்பட்டதாகும்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அஹ்மத் 2494
அப்துர் ரஹ்மான் பின் ஃகன்ம் அல் அஷ்அரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அபூஆமிர்(ரலி) அவர்கள் அல்லது அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் என்னிடம்கூறினார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை.(அவர்கள் கூறியதாவது)நான் நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்:என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம்இ பட்டு, மது, #இசைக்_கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப் பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்து விட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான்.அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிக்காகச்) செல்வான். அப்போது அவர்கள்'நாளை எங்களிடம் வா' என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாகஅவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்துவிடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும்இ பன்றிகளாகவும் மறுமைநாள் வரை உருமாற்றி விடுவான்.
நூல்: புகாரி 5590
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :வரும்நாளில்) எனது உம்மத்தவர்கள் மது அருந்துவார்கள். ஆதன் உண்மையான பெயரைக் காட்டிலும் அதை வேறு ஒரு பெயரால் அழைப்பார்கள். #இசைக்_கருவிகளை_இசைத்தும், பெண் பாடகர்கள் கொண்டு பாட்டும் பாடுவதுமான கேளிக்கைகளைதமக்கு ஏற்படுத்திக் கொள்வார்கள். ஆல்லாஹ் அவர்களின் காலடியில் பூமியைப்பிளந்து (அதில் அவர்களை புகச் செய்து விடுவான். மற்றவர்கள் குரங்குகாளகவும், பன்றிகளாகவும் மாற்றி விடுவான்.
(இப்னு மாஜா - கிதாபுல் ஃபிதன்)
நிச்சயமாக அல்லாஹ் மதுவையும், சூதாடுவதையும், தானியங்களிலிருந்து வடித்தெடுக்கப்பட்டவைகளையும்,#மத்தளம் அல்லது #மேளத்தை யும் (நரம்பினால் ஓசை எழுப்பக் கூடிய) #கிதார் போன்றவற்றையும் எனது உம்மத்துக்கு தடை செய்துள்ளான். மேலும், (ஒற்றைப்படைத்
தொழுகையான) வித்ரு - என் மீது அதிகப்படியாகக் கடமையாக்கி உள்ளான்.
(முஸ்னத் அஹ்மத் பாகம்:2 பக்கம் 165 மற்றும் 167)
மேலே உள்ள ஹதீஸ்களை பார்த்தீர்களானால் அவைகள் இசை கேட்பதை தடை செய்யவில்லை இசை கருவிகளை பயன்படுத்துவதை தான் தடைசெய்கிறது என்பதை விளங்கிக் கொள்ளலாம். இசை கருவிகளை பயன்பத்துவதை தான் இஸ்லாம் தடை செய்திருக்க இசையை கேட்பதும் ஹராம் என்று ஹதீஸில் இல்லாத ஒன்றை அல்லாஹ் தடை செய்யாத ஒன்றை தடை செய்வது தெளிவான வழிகேடாகும்.
இசை கேட்பதும் ஹராம் என்று வாதிடுபவர்கள் வைக்கக்கூடிய சில ஆதாரங்களை பார்க்கலாம்.
“இரண்டு ஓசைகள் சபிக்கப்பட்டவையாகும். சந்தோசத்தின் போது #கேட்கும்_குழல்_ஓசை, சோதனையின் போது #கேட்கும்_ஓலம்.” என்று நபியவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹஹு அன்ஹு)
ஆதாரம்: பஸ்ஸார் – 1:377-795 (பார்க்க: தஹ்ரீமு ஆலாதீத் தர்ப் – 52)
சந்தோசத்தின் போது கேட்கும் குழலோசை என்ற வார்த்தையை வைத்து இசை கேட்பது ஹராம் என்று சொல்வதாக இருந்தால் அந்த வரிகளை தொடர்ந்து சோதனையின்போது கேட்கும் ஓலம் என்பதையும் நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் எனவே ஒரு மைய வீட்டில் ஒப்பாரி வைக்கும் சத்தத்தை கேட்பதும் ஹராம் என்று கூறவேண்டும் ஆனால் இந்த இடத்தில் மாத்திரம் ஒப்பாரி வைப்பதை தான் ஹராம் என்று கூறுவார்களே ஒழிய ஒப்பாரி வைப்பதை கேட்பது ஹராம் என்று யாரும் கூற மாட்டார்கள். இந்த இரண்டு சட்டமும் இந்த ஹதீஸில் ஒன்றாகத்தான் வருகிறது. இந்த செய்தியை மேலும் தெளிவுபடுத்த கூடிய இன்னொரு ஹதீஸை பார்ப்போம் அந்த ஹதீஸ் மேலே உள்ள ஹதீஸின் இரண்டு சட்டத்திற்கும் தெளிவைத் தருகிறது.
நபி (ஸல்) அவர்கள் தனது கையை அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் எனும் தோழருடன்கோர்த்துக் கொண்டு, நோயுற்று மரண நிலையிலிருக்கும் தன் மகன் இப்றாஹீமைக்காணச் செல்கின்றார்கள். தம் மகனை உயிர் பிரியும் வரை மார்பில் கிடத்தி வைத்திருந்த நபி (ஸல்) அவர்கள், உயிர் பிரிந்ததும் தம் மகனைத் தரையில் கிடத்தி விட்டு, கண்ணில் நீர் சொறிய அழுத விழிகளுடன் இருந்த நபி (ஸல்) அவர்களைப் பார்த்து, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் அவர்கள், யா! ரசூலுல்லாஹ்தாங்களுமா அழுகின்றீர்கள்? என வினவ கீழ்க்கண்டவாறு நபி (ஸல்) அவர்கள்பதிலிறுக்கின்றார்கள் :
நிச்சயமாக நான் அழுவதைத் தடைசெய்யவில்லை. மாறாக,இரண்டு சப்தங்களைத் தடை செய்துள்ளேன். ஆவை வெட்கரமானதும், பாவகரமானதும் ஆகும்.முதலாவது, #ஷைஷத்தானின்_கருவிகளை_இசைக்_கருவிகளை இசைத்துக் கொண்டு பாடுவதும்| இரண்டாவதாக, துக்கரமான நிகழ்வுகளில் முகத்தில் அறைந்து கொண்டு, ஆடைகளைக் கிழித்துக் கொண்டு அழுவதையும் தடை செய்துள்ளேன்.எனது, இந்த அழுகையானது, மனதில் ஏற்பட்ட துக்கத்தினால் இரக்கம், கருணை காரணமாகவெளிப்பட்டதாகும். ஏவர் மனதில் கருணை இரக்கம் இல்லையோ அவர் இதனை அடைந்து கொள்ள மாட்டார்.
நூல் : ஆல்-ஹாக்கிம் அவர்கள் தனது நூலான அல் முஸ்தத்ரக் அலஸ் ஸஹீஹைன், எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
சந்தோசத்தின் போது கேட்கும் குழல் ஓசை என்பதற்கு விளக்கம்
ஷைஷத்தானின் கருவிகளை இசைக் கருவிகளை இசைத்துக் கொண்டு பாடுவது. மேலும் சோதனையின் போது கேட்கும் ஓலம் என்பதற்கு விளக்கம் துக்கரமான நிகழ்வுகளில் முகத்தில் அறைந்து கொண்டு, ஆடைகளைக் கிழித்துக் கொண்டு அழுவதும். என்பதை மேலே உள்ள ஹதீஸில் இருந்து விளங்கிக் கொள்ள முடியும்.
அதை தொடர்ந்து இன்னுமொரு ஆதாரத்தை முன்வைக்கிறார்கள்.
“மனிதரில் அறிவின்றி அல்லாஹ்வின் வழியிலிருந்து வழிகெடுப்பதற்காக வீணான செய்திகளை விலைக்கு வாங்குகின்றவர்களும் இருக்கின்றனர். அதனைப் பரிகாசமாகவும் எடுக்கின்றனர். இத்தகையோருக்கு இழிவு தரும் வேதனையுண்டு.” (லுக்மான்:06)
“எவனைத் தவிர வணக்கத்துக்குரியவன் வேறெவரும் இல்லையோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக வீணான செய்திகள் என்பது #பாடலையே குறிக்கிறது.” என்று இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹ{ அன்ஹ{ கூறுகிறார். (இப்னு அபீஷைபா-21130)
#பாடல் அது போன்றவைகளைப் பற்றியே இவ்வசனம் இறங்கியது.” என்று இப்னு அப்பாஸ் ரழியல்லாஹ{ அன்ஹ{ கூறுகிறார். (அதபுல் முப்ரத்-1265, பைஹகீ-10-221-223)
சிலர் மேலே உள்ள ஆதாரங்களை முன்வைத்து இசை கேட்பது ஹராம் என்றொரு வாதத்தை வைக்கிறார்கள். ஆனால் இதில் இசை கேட்பது ஹராம் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. முதல் விடயம் வீணான செய்திகள் என்பதற்கு மேலே கொடுக்கப்பட்ட விளக்கம் நபியவர்களின் கூற்று அல்ல அந்த வஹாபிகளின் விளக்கமாகும். இரண்டாவது விடயம் பொதுவாக இஸ்லாமிய சட்டம் எடுக்கும் போது ஒரு குர்ஆன் வசனத்தை மாத்திரம் வைத்து சட்டம் எடுப்பதில்லை அது சம்பந்தமாக வரக்கூடிய ஏனைய வசனங்கள் ஹதீஸ்களை கொண்டுதான் சட்டத்தை எடுப்பது அந்த அடிப்படையில் வீணான செய்திகள் என்பது இசையை தான் குறிப்பதாக வைத்துக்கொண்டாலும் நான் மேலே ஆரம்பத்தில் பதிந்த ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகிறது இசை என்பது இசை கருவிகளை பயன்படுத்துவதை தான் இஸ்லாம் தடை செய்து இருக்கிறது என்று எனவே இவர்கள் இதற்கு இசை என்ற பிழையான அதுவும் அந்த சஹாபி சொல்லாத ஒரு விளக்கத்தை இட்டுக் கட்டினாலும் அந்த ஹதீஸ்கள் தெளிவுபடுத்தி விட்டது இசைக்கருவிகளை பயன்படுத்துவதுதான் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்று.
மூன்றாவது விடயம் அந்த குர்ஆன் வசனத்திற்கு அந்த சஹாபாக்கள் யாருமே இசை என்ற விளக்கத்தை சொல்லவே இல்லை இவர்கள் பொய்யாக இங்கு இட்டு கட்டுகிறார்கள் அந்த சஹாபாக்கள் அந்த குர்ஆன் வசனத்தில் சொல்லப்படும் வீணான செய்திகள் என்பதற்கு அவர்கள் சொன்ன விளக்கம் பாடல் என்பதாகும் எனவே வீணான தவறான அர்த்தம் உடைய பாடல்களை தான் அந்த வசனத்தில் வீணான செய்திகள் என்பதன் மூலம் குறிக்கிறது என்றுதான் ஆகுமே ஒழிய இசை என்ற அர்த்தம் அறவே வராது. மேலும் பாடல்களைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதைப்பற்றிய ஆதாரங்களை கீழே பதிகிறேன் அதனை இவர்கள் முன்வைத்த சூரா லுக்மானின் குர்ஆன் வசனத்திற்கு சஹாபாக்கள் பாடல் என்று கொடுத்த விளக்கத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் உங்களுக்கு இன்ஷா அல்லாஹ் தானாகவே தெளிவு கிடைக்கும்.
கவிஞர்களை வீணர்களே பின்பற்றுவார்கள். அவர்கள் ஒவ்வோரு பள்ளத்தாக்கிலும் தட்டழிந்து திரிவதை (முஹம்மதே) நீர் பார்க்கவில்லiயா? மேலும் அவர்கள் செய்யாததையே சொல்கின்றனர். (அஷ்ஷுரா: வச: 224 -226)
நாம் கவிதையை அவருக்குக் (முஹம்மதுக்கு) கற்றுக் கொடுக்கவுமில்லை, அது அவருக்கு அவசியமும் இல்லை. (யாசீன்: 69)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் "அர்ஜ்" என்ற இடத்தில் நாம் இருந்து கொண்டிருந்த போது, ஒரு கவிஞர் கவிபாட ஆரம்பித்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த ஷைய்த்தானைப் பிடித்து நிறுத்துங்கள். எனக் கூறி விட்டு, உங்களில் ஒருவரின் வயிறு கவியால் நிரம்பி இருப்பதை விட சீழால் நிரம்பிக்காணப்படுவது மேலானது எனக் கூறினார்கள். (ஆதார நூல்: முஸ்லிம்).
சில சிறுமிகள் பத்ர் போரில் ஸஹீதான முன்னோர்களை புகழ்ந்து பாடி கஞ்சிராக்களை (தஃப்) அடித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, “எங்களிடையே இறை தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார்” என்று கூறினாள். உடனே நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் இதை விட்டு விட்டு நீ முன்பு சொல்லி கொண்டிருந்ததை சொல்” என்றார்கள்.
நூல்: ஸஹிஹுல் புகாரி 5147, அபூதாவூத், திர்மிதி
இதை அடுத்து இன்னுமொரு ஹதீஸை இசை கேட்பதும் ஹராம் என்பதற்கு சார்பாக வைக்கப்படுகிறது அதையும் பார்ப்போம்.
ஒரு ஆட்டிடையனின் குழலோசை இப்னு உமர் (ரலி) அவர்களின் காதில் விழுந்தது. அப்போது அவர்கள் தன் இரு காதுகளிலும் விரலை வைத்துக் கொண்டு அந்தப் பாதையை விட்டுவிட்டு (வேறொரு பாதையின் பக்கம்) வாகனத்தைத் திருப்பினார்கள். அவர்கள் (என்னிடம் அந்தச் சப்தம்) உனக்குக் கேட்கிறதா? என்று வினவினார்கள். அதற்கு நான் ஆம் என்றேன். அவர்கள் (சிறிது தூரம்) சென்ற பிறகு எனக்குக் கேட்கவில்லை என்று நான் கூறினேன். கைகளை (காதிலிருந்து) எடுத்து விட்டு மறுபடியும் அதேப் பாதைக்கு வாகனத்தைத் திருப்பினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டிடையனின் குழலோசையைக் கேட்ட போது அவர்கள் இதைப் போன்று செய்வதை நான் பார்த்தேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : நாஃபிஃ (ரஹ்)
நூல் : அஹ்மத் (4307)
மேலே பதிந்துள்ள இந்த செய்தி ஹஸன் தரத்தில் உள்ள செய்தியாகும். இந்த செய்தியை வைத்து இசை கேட்பது ஹராம் என்று சொல்ல முடியாது ஏனெனில் இதில் நபியவர்கள் இசை கேட்பதை தடை செய்ததாக இல்லை. நபியவர்கள் ஒரு செயலை செய்தால் அதை செய்வது சுன்னத் என்று சொல்லப்படுமே ஒலிய ஹராம் என்று சொல்லப்படாது. ஹராம் என்பது அல்லாஹ்வோ அவனது தூதரோ செய்யக்கூடாது என்று தடை செய்ததற்கேயாகும். நபி (அலை) அவர்களுக்கு விருப்பம் இல்லை என்பதற்காக அது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றாக ஆகாது. நபியவர்களும் ஒரு மனிதர் அவர்களுக்கும் சொந்த விருப்ப வெறுப்புகள் உண்டு அவைகள் மார்க்கமாக ஆகாது.
நபி அவர்களுக்கு உடும்பு இறைச்சி விருப்பமில்லை நபியவர்களுக்கு உடும்பு இறைச்சி கொடுக்கப்பட்ட போது அதனை உன்ன மறுக்கிறார்கள். எனவே அதற்காக உடும்பு இறைச்சி ஹராம் என்று சொல்ல முடியுமா? முடியாது.
மேலே உள்ள ஹதீஸில் அந்த ஸஹாபி செய்தது போன்று இன்னும் ஒரு ஸஹாபி வேறு ஒரு செய்தியில் நபியவர்கள் பிரயாணத்தில் இருக்கும்போது ஒரு இடத்தில் ஒரு மரத்தின் கீழ் நிழலில் ஓய்வெடுத்துவிட்டு சென்றதாக கூறி அவர்களும் அதேபோன்று செய்கிறார்கள். இப்போ யாராவது அந்த இடத்தில் மரத்தின் கீழ் ஓய்வெடுப்பது ஃபர்ல் என்று கூறுவார்களா? மாட்டார்கள். இஸ்லாத்தில் ஒரு சட்டத்தை ஃபர்ல் என்று சொல்வதாக இருந்தால் நபியவர்கள் இதனை கடமை ஆக்கினார்கள் அல்லது கட்டளையிட்டார்கள் என்று தெளிவாகக் கூறப்பட்டு இருக்க வேண்டும். அதேபோன்று இஸ்லாத்தில் ஒன்றை ஹராம் என்று சொல்வதாக இருந்தால் நபியவர்கள் அதனை தடை செய்ததாக தெளிவாக கூறப்பட்டு இருக்கவேண்டும்.
வேண்டுமென்றால் மேலே உள்ள ஹதீஸை வைத்து நபியவர்கள் செய்தது போன்று இசை கேட்கும் போது காதுகளை மூடிக்கொண்டு அந்த இடத்தைவிட்டு செல்வது சுன்னத் என்று சொல்லலாமே ஒழிய ஹராம் என்று சொல்ல முடியாது.
எனவே பன்றி ஹராம் என்றதும் பன்றியை பார்ப்பதும் ஹராம் என்று சொல்வது போன்றுதான் இசை ஹராம் என்றதும் இசை கேட்பதும் ஹராம் என்று சொல்வது. இசை சம்பந்தமாக வரக்கூடிய ஹதீஸ்களை பார்க்கும்போது தெளிவாக விளங்குகிறது இஸ்லாம் இசை கருவிகளை பயன்படுத்துவதை தான் ஹராம் ஆக்கி உள்ளது என்று. இன்னும் சொல்லப்போனால் இசைக்கருவிகளை பயன்படுத்துவது எந்நேரமும் எல்லா இடங்களிலும் ஹராமா என்று பார்த்தால் அதுவும் இல்லை பெருநாள் தினங்களிலும் திருமண வைபவங்களிலும் இசை பாடல்களை அனுமதிக்கப்பட்டு இருப்பதை கீழே உள்ள ஹதீஸ்களை பார்க்கும்போது விளங்கிக் கொள்ளலாம்.
ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறுகிறார்கள்:
புஆஸ் எனும் போரின் போது அன்சாரிகள் ஒருவரை ஒருவர் நோக்கிப் பாடிய பாடல்களை இரு அன்சாரிச் சிறுமிகள் என்னருகில் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர். (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், 'இறைத் தூதரின் இல்லத்திலேயே #ஷைத்தானின்_இசைக்_கருவிகளா?' என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போது நபிகள் நாயகம் ﷺ அவர்கள், '(அவ்விருவரையும் விட்டு விடுங்கள்). அபூபக்ரே! ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள்' என்று கூறினார்கள்.
நூல்: ஸஹிஹ் முஸ்லிம் 1619
ஒருமுறை நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களிடம் ஒருவர் வந்து (திருமணத்தில்) #இசைப்பதையும், கேளிக்கை நடத்துவதையும் அனுமதித்துள்ளீர்களா? என வினவினார். அதற்கு, 'ஆம்! அது திருமணம்தானே! விபச்சாரமல்லவே!' என நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் பதில் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹழ்ரத் ஸாயிப் பின் யஸீத் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: (தப்ரானி, பத்ஹுல் பாரி, பாகம் 11, பக்கம் 133)
ஹஸ்ரத் ருபய்யிஃ பின்த் முஅவ்வித் (ரலியல்லாஹு அன்ஹா) கூறினார்கள்:
எனக்கு திருமணம் நடந்த பின்னர், நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் என்னிடம் வந்தார்கள். எனக்கருகில் இப்போது நீங்கள் (ஹதீஸின் இரண்டாவது அறிவிப்பாளர்) அமர்ந்து இருப்பது போல் (அத்தகைய தூரத்தில்) என் விரிப்பின் மீது அமர்ந்தார்கள். அப்போது சில சிறுமிகள் பத்ர் போரில் ஸஹீதான முன்னோர்களை புகழ்ந்து பாடி #கஞ்சிராக்களை_(தஃப்)_அடித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, “எங்களிடையே இறை தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார்” என்று கூறினாள். உடனே நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் இதை விட்டு விட்டு நீ முன்பு சொல்லி கொண்டிருந்ததை சொல்” என்றார்கள்.
நூல்: ஸஹிஹுல் புகாரி 5147, அபூதாவூத், திர்மிதி
இதற்கு மேலும் இசை கேட்பதை யாராவது ஹராம் என்று சொல்வார்களாக இருந்தால் குறைந்தது அவர்கள் சொல்லக்கூடிய நிலைப்பாட்டில் அவர்கள் உறுதியாக இருக்க வேண்டும் இன்று Facebook Whatsapp Youtube போன்று இணையத்தளங்களில் வரும் ஆடியோ வீடியோ போன்றவைகளில் 97% இசை கலந்தே வருகிறது எனவே இணையத்தில் வரும் வீடியோக்களை இவர்கள் பார்க்கவே கூடாது. அதேபோன்று பஸ்களில் அல்லது கடை தெருக்களுக்கு போனாள் எங்கு பார்த்தாலும் இசைகள் தான் நிறைந்துள்ளது எனவே அந்த ஸஹாபி செய்தது போன்று இவர்களும் காதை மூடிக்கொண்டு அந்த இடத்தைவிட்டு வேறு வழியில் செல்ல வேண்டும். ஆனால் இவர்கள் இசை கேட்பது ஹராம் என்று தான் சொல்வார்களே ஒழிய மேலே சொன்ன விடயங்களை கடைபிடிக்க மாட்டார்கள்.
அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணை(த் தெய்வங்)கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? (42:21)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)
ஆதாரம்: புஹாரி ஹதீஸ் இலக்கம்:2697
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
- Ashfaaq Reshard -
இந்த பதிவிற்கு Reply செய்ய விரும்பினால் "இஸ்லாமிய ஆய்வு மையம்" என்ற குழுமத்தில் இனைந்து Reply செய்யலாம். Group Post Link to Reply : https://www.facebook.com/groups/tamilislamicresearch/permalink/414213399456880/
Reference :--
என் தாயரின் சகோதரியான உம்மு ஹூஃபைத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு (உலர்ந்த) பாலாடைக் கட்டியையும் வெண்ணெயையும் உடும்புகளையும் அன்பளிப்பாகத் தந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் பாலாடைக் கட்டியிலிருந்தும், வெண்ணையிலிருந்தும் (சிறிது எடுத்து) உண்டார்கள். ஆனால் அவர்களுக்கு அருவருப்பாகத் தோன்றியதால் உடும்புகளை உண்ணாமல் விட்டு விட்டார்கள். (எனினும்) அது (உடும்பு) அல்லாஹ்வின் தூதருடைய உணவு விரிப்பில் வைத்து உண்ணப்பட்டது. அது ஹராமாக (தடை செய்யப்பட்டதாக) இருந்திருந்தால் அல்லாஹ்வின் தூதருடைய உணவு விரிப்பில் வைத்து உண்ணப்பட்டிருக்காது.
புஹாரி :2575 இப்னு அப்பாஸ் (ரலி).
நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் (அன்னை) மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்திற்குச் சென்றேன். அவர்கள் எனக்கும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் சிறிய தாயாராவார்கள். (அன்னை) மைமூனாவிடம் பொரிக்கப்பட்ட உடும்பு ஒன்றைக் கண்டேன். அதை அவர்களின் சகோதரி ஹுஃபைதா பின்த் ஹாரிஸ் (ரலி) நஜ்திலிருந்து கொண்டு வந்திருந்தார்கள். (அன்னை) மைமூனா (ரலி) அந்த உடும்பு இறைச்சியை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முன் வைத்தார்கள். இறைத்தூதர் அவர்களோ, எந்த உணவாயினும் அதன் பெயர் தமக்குக் கூறப்பட்டு, அதைப் பற்றிய விவரம் சொல்லப்படாத வரை அதன் பக்கம் தம் கையை நீட்டுவது அரிதாகும். (இந்நிலையில்) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் கையை அந்த உடும்பின் பக்கம் நீட்ட அங்கிருந்த பெண்களில் ஒருவர் ‘நீங்கள் பரிமாறியிருப்பது என்னவென்று இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குத் தெரிவியுங்கள். அது உடும்பு, இறைத்தூதர் அவர்களே!” என்று கூறினார். உடனே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உடும்பைவிட்டுத் தம் கையை எடுத்துக்கொண்டார்கள். அப்போது நான் ‘உடும்பு தடை செய்யப்பட்டதா? இறைத்தூதர் அவர்களே!” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘இல்லை; ஆயினும், அது என் சமுதாயத்தாரின் பூமியில் இல்லை. எனவே, என் மனம் அதை விரும்பவில்லை” என்று கூறினார்கள். உடனே நான் அதைத் துண்டித்துச் சாப்பிட்டேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
புஹாரி : 5391 காலித் பின் வலீத் (ரலி).
No comments