இஸ்லாமிய வினா விடை 2
கேள்வி : கைபர் போரில் யாரிடம் இஸ்லாமிய கொடியை நபிகளார் கொடுத்தார்கள்?
பதில் : அலீ (ரலி) (ஆதாரம் : புகாரி 3009)
3009. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் கைபர் போரின்போது, 'நாளை நான் ஒரு மனிதரிடம் இஸ்லாமியச் சேனையின் கொடியைக் கொடுப்பேன். அல்லாஹ் அவரின் கரங்களில் வெற்றியைக் கொடுப்பான். அவர் (எத்தகையவர் எனில்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார்; அவரை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கிறார்கள்' என்றார்கள். மக்கள், 'நபி(ஸல்) அவர்கள் யாரிடம் கொடியைக் கொடுப்பார்கள்?' என்று தமக்குள் ('இன்னாரிடம் கொடுப்பார்கள்' என்று சிலரைக் குறிப்பிட்டுப்) பேசியபடி தங்கள் இரவைக் கழித்தார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் (இஸ்லாமியச் சேனையின்) கொடி தம் கரத்தில் கொடுக்கப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டபடி காலை நேரத்தை அடைந்தனர். (காலை நேரம் வந்தவுடன்) 'அலீ எங்கே?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'அலீ அவர்களுக்குக் கண் வலி' என்று சொல்லப்பட்டது. எனவே, (அலீ அவர்களை அழைத்து வரச் செய்து) நபி(ஸல்) அவர்கள், அலீ அவர்களின் இரண்டு கண்களிலும் தம் எச்சிலை உமிழ்ந்து அவர்களுக்காக (வலி நீங்கிட) பிரார்த்தித்தார்கள். உடனே, அலீ அவர்கள் (அதற்கு முன்) தமக்கு வலியே இருந்ததில்லை என்பது போன்று குணமடைந்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் அலீ அவர்களிடம் கொடியைக் கொடுத்தார்கள். 'அவர்கள் நம்மைப் போன்று (இறைச் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்த முஸ்லிம்களாக) ஆகும் வரை நான் அவர்களுடன் போர் புரிவேன்' என்று அலீ அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், '(அலீயே!) நிதானத்துடன் சென்று அவர்களின் களத்தில் இறங்குங்கள். பிறகு, அவர்களை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும்படி அழையுங்கள். (இஸ்லாத்தை ஏற்பதால்) அவர்களின் மீது கடமையாகுபவற்றை அவர்களுக்குத் தெரிவியுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் வாயிலாக அல்லாஹ் ஒருவரை நேர்வழியில் செலுத்துவது (அரபுகளின் மிக உயர்ந்த சொத்தான) சிகப்பு ஒட்டகங்களை (தருமம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்' என்று கூறினார்கள்.
Book : 56 புஹாரி
No comments