Header Ads

Header ADS

அழ்ழாஹ் வின் வேதம் பூரணமற்றதா?


- அபூ முஹம்மத் அல் முஹம்மதி -



ஒவ்வொரு சமூகத்தினருக்கும் சாட்சியாளராக அவர்களிலிருந்தே ஒருவரை (நாம்) அனுப்பும் நாளில் (இறுதி சமூகமாகிய) இவர்களுக்கு சாட்சியாளராக உம்மை (நாம்) கொண்டுவருவோம். மேலும் உம்மீது (இறுதி) வேதத்தை ஒவ்வொரு விடயத்திற்கும் விளக்கமாக (நாம்) இறக்கிவைத்துள்ளோம். அத்துடன் (அது) நேர்வழியாகவும், (அழ்ழாஹ்வின்) அருளாக இருப்பதுடன், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் இருக்கின்றது. ( 1 6 : 8 9 )

அழ்ழாஹ் மிகவும் நீதமானவன். அவனது நீதத்தின் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்களுக்கு நல்லவற்றையும், தீயவற்றையும் அறிவிக்கக்கூடிய நபிமார்களை அனுப்பும் அவனது ஏற்பாடாகும். அந்த நபிமார்கள் அழ்ழாஹ்வினால் தேர்வுசெய்யப்படும் நல்லடியார்களாக இருப்பார்கள். அவர்களது கடமை அழ்ழாஹ்வின் நேர்வழியை மக்களுக்கு எத்திவைப்பதாகும். அதேபோன்று நபிமார்கள் அனுப்பப்பட்ட ஒவ்வொரு சமூகமும் அவர்கள் கொண்டுவந்த நேர்வழியின்படி நடந்தார்களா? என மறுமைநாளில் விசாரிக்கப்படுவார்கள். அத்துடன் அழ்ழாஹ் நிறுத்திக்கொள்ள மாட்டான். நேர்வழியை எத்திவைக்கும் பொறுப்பு கடமையாக்கப்பட்ட அந்த நபிமார்களிடமும் அவர்களது கடமையை சரியாக நிறைவேற்றினார்களா? என்பது பற்றி விசாரிப்பான்.
அழ்ழாஹ் கூறுவதாவது:-
எனவே நிச்சயமாக (நாம்) எவர்களிடம் (தூதர்) அனுப்பப்பட்டாரோ அவர்களையும் விசாரனை செய்வோம். அத்துடன் நிச்சயமாக (நாம்) தூதர்களையும் விசாரனை செய்வோம்.
( 0 7 : 0 6 )

அழ்ழாஹ்வினால் மேற்கொள்ளப்படும் விசாரனையில்கூட மனிதர்கள் பொய் சொல்லித் தப்பிக்க முயற்சி செய்வார்கள். அப்போது அழ்ழாஹ் அத்தகைய பொய்யர்களுக்கும் அவர்களது பொய்யை நிரூபிப்பதற்கு சாட்சிகளைக் கொண்டுவருவான். உனது நேர்வழியை எமக்கு எத்திவைக்கக்கூடிய எந்தவொரு எச்சரிக்கையாளரும் எம்மிடம் வரவில்லை என்பன போன்ற பொய்களைச் சொல்லும்போது அந்தக் கடமைகளைச் செய்வதற்காக அனுப்பப்பட்ட நபிமார்களையே அழ்ழாஹ் சாட்சியாளர்களாகக் கொண்டு வருவான். இந்த பொதுவான ஏற்பாட்டின்படி இறுதி சமூகமாகிய எங்கள் அனைவருக்கும் சாட்சியாக ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) கொண்டு வரப்படுவார்கள். அதனைத்தான் அழ்ழாஹ் இந்த வசனத்தில் முதலாவதாக சுட்டிக் காட்டுகின்றான்.

அதனைத் தொடர்ந்து அழ்ழாஹ் அவனது வேதத்தை ஒவ்வொரு விடயத்தினையும் தெளிவுபடுத்தக்கூடியதாக இறக்கி வைத்திருப்பதாகக் கூறுகின்றான். இந்த வேதம் என்ன நோக்கத் திற்காக இறக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை அது அழகாக நிறைவேற்றியுள்ளது. நேர்வழி எது என்பதைத் தெளிவாக அடையாளமிட்டுக் காட்டுவதே அழ்ழாஹ் வேதங்களை இறக்கிவைத்த நோக்கமாகும். எனவே நேர்வழி அடைந்திடுவதற்கு அவசியமான அத்தனை அம்சங்களும் மிகத்தெளிவாக அழ்ழாஹ்வின் வேதத்தில் எடுத்துக்கூறப்பட்டுள்ளன. ஒன்றோ அது அல்குர்ஆனில் காணப்படும். அல்லது ஸஹீஹான ஹதீஸில் காணப்படும். ஏனெனில் அழ்ழாஹ்வின் வேதம் எனும் வார்த்தை இஸ்லாமியக் கண்னோட்டத்தில் அல்குர்ஆனையும் ஸஹீஹான ஹதீஸ்களையும் குறிக்கும் வார்த்தையாகும்.
எமது சமூகத்திலே இயக்கங்கள் எனவும், மத்ஹபுகள் எனவும், தரீக்காக்கள் எனவும் பல பிரிவுகள் காணப்படுகின்றன. அவை ஒவ்வொன்றிற்கும் தனித்தனி செயல்முறைகள் உள்ளன. அவற்றில் அழ்ழாஹ்வின் வேதத்தில் இல்லாதவைகளும், அழ்ழாஹ்வின் வேதத்திற்கு முரணானவைகளும் உள்ளன. இவற்றைப் புறக்கணித்துவிட்டு அழ்ழாஹ்வின் வேதத்தை மாத்திரம் பின்பற்ற விரும்பாத இத்தகைய பிரிவுகள் தாம் பின்பற்றும் தவறான கொள்கைகளையும் சரிகாண்பதற்காக அல்குர்ஆனையும், ஸஹீஹான ஹதீஸ்களையும் மட்டும் பின்பற்றுவது மார்க்கத்தை முழுமையாகப் பின்பற்றுவதற்குப் போதாது என்கின்ற ஒரு பயங்கரமான நச்சுக்கருத்தை மறைமுகமாக சமூகத்தினரின் உள்ளங்களில் புகுத்தியுள்ளன.

அழ்ழாஹ் அவனது வேதத்தில் ஒவ்வொரு விடயத்திற்கும் தெளிவு இருப்பதாகக் கூறியிருக்கின்றான். அழ்ழாஹ் இவ்வாறு கூறியிருக்க இதற்கு நேர்முரணாக குர்ஆனையும் ஸஹீஹான ஹதீஸையும் மட்டும்கொண்டு நேர்வழிபெற்றிட முடியாது என இவர்கள் போதிக்கின்றனர்.

இப்போது ஒரு முஸ்லிம் இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்தேயாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றான். ஒன்றில் அழ்ழாஹ்வைவிட அறிந்தவர் எவரும் இல்லை, நாம் அவனுக்குத்தான் அடிபணிய வேண்டும், எனவே அவன் சொல்வதை முற்றாக நம்பி உண்மை முஸ்லிமாக இருக்க வேண்டும் என்கின்ற முடிவிற்கு வர வேண்டும். அல்லது அழ்ழாஹ் கூறியுள்ளதை ஒரு பக்கம் வைத்துவிட்டு அவனால் படைக்கப்பட்ட மிகச்சொற்ப அறிவு கொடுக்கப்பட்ட மனிதர்கள் சொல்வதை நம்ப வேண்டும் என்கின்ற முடிவிற்கு வர வேண்டும். இந்த இரண்டாவது முடிவை மேற்கொள்பவர்கள் அழ்ழாஹ்வை விசுவாசித்தவர்களாக இருப்பார்களா? என்பதை வாசகர்களாகிய நீங்கள் இலகுவாகத் தீர்மானித்துக்கொள்ளலாம். அழ்ழாஹ்வின் வேதத்திற்கு முரணாக மத்ஹபுகள், தரீக்காக்கள், இயக்கங்கள் எனும் திரைகளைப்
பயன்படுத்தி மனிதர்கள் இஸ்லாத்திலே புகுத்திய சட்டங்கள் அகீதா முதற்கொண்டு வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் காணப்படுகின்றன.

அழ்ழாஹ்வின் வேதத்தில் இல்லாத சட்டங்களை இஸ்லாத்திலே புகுத்துவதன் மூலம் இவர்கள் அழ்ழாஹ்வின் வேதத்தில் குறைபாடு உள்ளது என்பதை நாவினால் கூறாமல் செயலினால் உணர்த்துகின்றார்கள். இதே விடயத்தை இவர்கள் நாவினால் கூறும்போது வார்த்தைகளை அழகுபடுத்தி அழ்ழாஹ்வின் வேதத்திலிருந்து உருவாக்கப்பட்டதுதான் மத்ஹபுகளும் தரீக்காக்களும் எனக் கூறுகின்றார்கள்.

முஆவியா பின் ஹகம் ல கூறுகின்றார்கள்:-
ஓருமுறை ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களுடன் நான் தொழுதுகொண்டிருந்தபோது கூட்டத்திலிருந்த ஒரு மனிதர் தும்மினார். உடனே நான் 'யர்ஹமுகழ்ழாஹ்' எனக் கூறினேன். அப்போது மக்கள் எனது பக்கம் பார்வையைத் திருப்பினார்கள். நானோ 'எனது தாயின் கைசேதமே! உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? என்னின்பால் பார்க்கின்றீர்களே? 'எனக் கேட்டேன். அப்போது (அவர்கள்) தங்களது கைகளைத் தங்களது தொடைகளில் அடிக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் என்னை அமைதியாக இருக்கச் செய்கிறார்கள் என்பதை (நான்) அறிந்தபோது அமைதியாகிவிட்டேன். ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) தொழுதுமுடிந்ததும் எனது தந்தையும், எனது தாயும் அவர்கள்தான். கற்பிப்பதில் அவர்களைவிட சிறந்த ஆசிரியரை அதற்கு முன்பும், அதற்கும் பின்பும் (நான்) கண்டதில்லை. அழ்ழாஹ்மீது சத்தியமாக என்னை (நபியவர்கள்) அதட்டவும் இல்லை, எனக்கு அடிக்கவும் இல்லை, என்னைத் திட்டவும் இல்லை. (அவர்கள்) 'நிச்சயமாக இந்தத் தொழுகையில் மனிதர்களது எந்தவொரு வார்த்தையும் பொருந்தி வராது. அது தஸ்பீஹாக தக்பீராக அல்லது அல்குர்ஆனை ஓதுவதாக இருக்க வேண்டும்.' எனக் கூறினார்கள். (அப்போது 'அழ்ழாஹ்வின் தூதரவர்களே! நிச்சயமாக நான் புதிதாக ஜாஹிலிய்யத்திலிருந்து வந்திருக்கின்றேன். நிச்சயமாக அழ்ழாஹ் இஸ்லாத்தைத்தைக் கொண்டுவந்துள்ளான். நிச்சயமாக எம்மில் சில மனிதர்கள் குறிகாரர்களிடம் செல்லுகின்றனர்' எனக் கூறினேன். 'அவர்களிடம் செல்லாதே!' எனக் கூறினார்கள். 'எங்களில் சில மனிதர்கள் பறவை சாஸ்திரம் பார்க்கின்றார்கள்?' எனக் கேட்டேன். 'அது அவர்களது உள்ளங்களில் தோன்றக்கூடிய ஒரு (கற்பனையாகும்.) அவர்களை (அது) ஒருபோதும் (அவர்கள் செய்ய நினைத்ததை விட்டும்) தடைசெய்யக்கூடாது' எனக் கூறினார்கள். 'எங்களில் சில மனிதர்கள் கோடு கீறுகின்றார்கள்?' எனக் கேட்டேன். (அதற்கு) நபிமார்களில் ஒரு நபி கோடு கீறக் கூடியவராக இருந்தார்கள். எவரது கோடு சரியாக அமைந்து விடுகின்றதோ அது (உண்மையாகிவிடுகின்றது.) எனக் கூறினார்கள். எனக்கு ஒரு அடிமைப் பெண் இருந்தாள். (அவள்) எனது ஆடுகளை உஹத் மலைப்பகுதியிலும், ஜவானியாப் பகுதியிலும் மேயவிடுவாள். ஒருநாள் (நான்) சென்று பார்த்தபோது அவளது ஆடுகளில் ஒரு ஆட்டை ஓனாய் பிடித்துச் சென்றிருந்தது. நானும் ஆதமின் சந்ததியிலுள்ள ஒரு மனிதன். (அவர்கள்) கைசேதப்படுவதுபோல் (நானும்) கைசேதப்படுகிறேன். எனவே அவளை (நான்) கடுமையாக அடித்துவிட்டேன். பின்னர் (நான்) ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களிடம் வந்து (நடந்ததைக் கூறியபோது) அது எனது மிகப்பெரிய தவறு எனக்கூறினார்கள். (உடனே) 'அவளை உரிமையிட்டுவிடட்டுமா?ஷஷ எனக் கேட்டேன்.'அவளை என்னிடம் கூட்டிக்கொண்டு வருவீராக! எனக் கூறினார்கள். அவளைக் கூட்டிக்கொண்டு (ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) ) அவர்களிடம் வந்தேன். அப்போது அவளை நோக்கி 'அழ்ழாஹ் எங்கே இருக்கின்றான்?' எனக் கேட்டார்கள். 'வானத்திலே இருக்கின்றான்'எனக் கூறினாள். 'நான் யார்?'எனக் கேட்டார்கள். 'தாங்கள் அழ்ழாஹ்வின் தூதராவீர்கள்' எனக் கூறினாள். (என்னை நோக்கி) 'அவளை உரிமையிடுவீராக! ஏனெனில் நிச்சயமாக அவள் விசுவாசியான (அடிமைப்) பெண்.' என (ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) ) கூறினார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் கி.மஸாஜித் 07)

ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்கள்தான் எங்களுக்கு அழ்ழாஹ்வின் வேதத்தை எந்தத் தவறும் இல்லாமல் கற்றுத்தந்தவர்கள். அந்த ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) ஒரு மனிதனை விசுவாசியா? இல்லையா? என்பதை அறிந்து கொள்வதற்கு கேட்ட கேள்விகளில் முதலாவது கேள்வி அழ்ழாஹ் எங்கே இருக்கின்றான் என்பதாகும். அழ்ழாஹ் வானத்தில் இருக்கின்றான் எனக்கூறியதுடன், தன்னை நபியாக ஏற்றுக்கொண்ட அந்த அடிமைப் பெண் விசுவாசியானவள் என ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) கூறுகின்றார்கள். இதனை அழ்ழாஹ் நேரடியாகவும் அவனது திருமறையில் பின்வருமாறு கூறுகின்றான்.

தா: ஹா (நீர்) கெட்டுப்போவதற்காக அல்குர்ஆனை உம்மீது (நாம்) இறக்கியருளவில்லை. அழ்ழாஹ்வைப் பயப்படுவோருக்கு ஒரு நல்லுபதேசமாகவே (அல்குர்ஆனை இறக்கிவைத்துள்ளோம். இது) பூமியையும் உயர்வான வானங்களையும் படைத்தவனால் இறக்கியருளப்பட்டதாகும். நிச்சயமாக அழ்ழாஹ் அர்ஷpன் மீது அமர்ந்தான்.
( 2 0 : 1 - 5 )

அழ்ழாஹ்வின் வேதத்தின் இரண்டு பகுதிகளாகிய அல்குர்ஆனும் ஸஹீஹான ஹதீஸும் இணைந்து போதிக்கும் இந்த அடிப்படை அம்சத்தை இன்று முஸ்லிம்கள் எனக்கூறக்கூடிய எமது சமூகத்தில் எத்தனைபேர் தெரிந்து வைத்திருக்கின்றார்கள்? எத்தனைபேர் நம்புகின்றார்கள்?. அல்குர்ஆனின் மிகச்சிறந்த ஒரு தமிழ் மொழிபெயர்ப்பு அறிஞர் அப்துல் ஹமீத் பாகவி அவர்களால் எழுதப்பட்டு, அது இலங்கையில் பரவலாகக் காணப்படுகின்றது. அப்படியிருந்தும் அதனை எழுதியவர் மத்ஹப் எனும் வழிகேட்டில் சிக்கியுள்ளதால் அவர் இருக்கும் மத்ஹபின் தவறான கொள்கையை சரிகாண்பதற்காக மேலேயுள்ள அல்குர்ஆனிய வசனத்தை அறபு மொழிக்கும், அழ்ழாஹ்வின் வேதத்திற்கும் முரணான விதத்தில் 'அழ்ழாஹ் அர்ஷpன்மீது ஆட்சியமைத்தான்.' என மொழி பெயர்ப்புச் செய்துள்ளார். அழ்ழாஹ்வும் அவனது தீனைக் கற்றுத்தர வந்த தூதரும் அழ்ழாஹ் வானத்திற்கு மேல் அர்ஷpல் அமர்ந்துள்ளான் எனப் போதித்திருக்க, அழ்ழாஹ்வும் அவன் தூதரும் கற்றுத்தந்த மார்க்கத்தைப் பின்பற்றுகின்றோம் எனக் கூறுகின்றவர்கள் எப்படி அதற்கு நேர்முரணான நம்பிக்கை கொள்ள முடியும்?.

அழ்ழாஹ்வின் பூரணமாக்கப்பட்ட வேதத்தில் மேலதிகமாக அதில் இல்லாதவற்றையும் அதற்கு முரணானவற்றையும் அதில் இணைத்துள்ளார்கள் என்பதை உங்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் ஒரு உதாரணமாகத்தான் மேலேயுள்ள ஹதீஸை உங்களுக்கு நாம் முன்வைத்தோம். அழ்ழாஹ் அர்ஷpலே அமர்ந்திருக்கின்றான் என்பது அகீதா எனப்படக்கூடிய நம்பிக்கை சார்ந்த விடயமாகும். அவைபற்றி அழ்ழாஹ்வின் வேதம் கூறுவதை அப்படியே நம்புபவது ஒருவன் விசுவாசி என்பதற்குரிய அடையாளங்களில் ஒன்றாகும்.

ஷhபிஈ மத்ஹப் இலங்கையில் அதிகமானோரால் பின்பற்றப்படுவதால் அதில் உள்ள ஒரு சட்டத்தை மற்றொரு உதாரணமாக இங்கு குறிப்பிடுகின்றோம். தொழுகையை நிறைவேற்ற நீங்கள் எழுந்து நிற்கும்போது நாவினால் நிய்யத்தைக் கூற வேண்டும் என்பது ஷhபிஈ மத்ஹபின் சட்டமாகும். இது இபாதத் என்பதில் மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ள ஒரு சட்டமாகும். இதனை இஸ்லாமியக் கண்னோட்டத்தில் பித்அத் எனக் கூறப்படும். பித்அத்தை ஒரு முஸ்லிம் செய்வது ஒருபக்கமிருக்க, வேறு எவராவது செய்யும்போது குறைந்தபட்சம் அதனை மனதால் வெறுக்காதவனுக்கு கடுகுப் பிரமானமேனும் ஈமான் இல்லை என்பது ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களின் தீர்ப்பாகும்.

நிய்யத் என்பது அறபு வார்த்தை. இதன் பொருள் எண்ணம் என்பதாகும். எண்ணம் உள்ளத்தில் எழக் கூடியது என்பது இலகுவில் புரிந்துகொள்ள முடியாத ஒரு மந்திரமா? எனவே அறபு மொழிக்கு முரணாகவும் அந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) மக்காவில் வாழும் காலத்திலேயே தொழுகை கடமையாக்கப்பட்டு, தொழுதுவந்தார்கள். மதீனாவில் வாழ்ந்த காலத்தை மட்டும் நாம் கணக்கிட்டுப் பார்த்தால்கூட பதின்மூன்று வருட காலத்தில் கடமையான தொழுகை மாத்திரம் ஏறக்குறைய இருபத்திமூன்றாயிரம் தொழுகைகளுக்கு மேற்பட்ட தொழுகைகளைத் தொழுதுள்ளார்கள். ஆனால் ஒரு ஹதீஸில்கூட ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) தொழுகையை ஆரம்பிக்கும்போது நாவினால் சில வார்த்தைகளை நிய்யத் என மொழிந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை. அப்படியிருக்க கடமையான தொழுகைக்கானது, ஸுன்னத்தான தொழுகைக்கானது என வேறு வேறாக ஒவ்வொரு தொழுகைக்கும் தனித்தனியாக இவ்வாறுதான் நிய்யத் சொல்ல? வேண்டும் என மத்ஹபில் சட்டம் எழுதிவைத்திருப்பதன் மூலம் அழ்ழாஹ்வின் வேதத்தில் குறைபாடு இருக்கின்றது என இவர்கள் நிரூபிக்க முயற்சி செய்துள்ளார்களா? இதிலிருந்து அழ்ழாஹ்வின் வேதத்தில் இல்லாததை சட்டமாக்குவதன் விபரீதத்தை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.

இங்கு நாம் தெளிவுபெற எடுத்துக்கொண்ட அழ்குர்ஆனிய வசனத்தில் ஒவ்வொரு விடயம் பற்றியும் மிகத்தெளிவான விளக்கம் அழ்ழாஹ்வின் வேதத்தில் உள்ளதாக அழ்ழாஹ் கூறுகின்றான். எனவே அழ்ழாஹ்வின் வேதத்தில் மேலதிகமான சட்டங்களை வேறு எவரும் சேர்க்க வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. அப்படி எவராவது தெரிந்துகொண்டே அழ்ழாஹ்வின் வேதத்தில் மேலதிக சட்டங்களை சேர்க்கும்போது அழ்ழாஹ்வின் வேதம் குறைபாடுடையது என்பதுதான் பொருளாகின்றது. இது பாரதூரமானதொரு நம்பிக்கை என்பதை எந்தவொரு முஸ்லிமும் மறுக்கமாட்டார்

பூரணமானதும், அனைத்து விடயங்களைப்பற்றிய தெளிவைக் கொண்டதுமான அழ்ழாஹ்வின் வேதம் மனிதர்களுக்கு அழ்ழாஹ்வின் அருளைப் பெற்றுத்தரக்கூடிய நேர்வழியாக இருப்பதுடன், அதனைப் பின்பற்றக்கூடிய விசுவாசிகளுக்கு அது ஒரு நன்மாராயம் எனக்கூறி அழ்ழாஹ் மேலேயுள்ள வசனத்தை முடிக்கின்றான். எந்த மக்களை நோக்கி முதன்முதலில் அழ்ழாஹ்வின் வேதம் இறங்கியதோ அந்த மக்கள் அழ்ழாஹ்வின் வேதத்தை மாத்திரம்தான் பின்பற்றினார்கள். அதன்மூலம் அவர்கள் நேர்வழியை அடைந்து அதற்குரிய வெகுமதியாக அழ்ழாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான் என்பதை அழ்ழாஹ் அதே அல்குர்ஆனில் தெளிவாகக் கூறியும் விட்டான்.

மத்ஹபுகள், தரீக்காக்கள், இயக்கங்கள் இல்லாமல் ஸஹாபாக்கள் முழு வெற்றிபெற முடியும் என்றால் அந்த வெற்றியை அடைவதற்கு எமக்கு மாத்திரம் ஏன் இந்த மத்ஹபுகளும், தரீக் காக்களும், இயக்கங்களும் தேவைப்படுகின்றன? இந்த சாதாரண உண்மையை நாம் சிந்தித்து, விளங்கி, ஏற்றுக் கொண்டால் அழ்ழாஹ் எம்மை நேர்வழியின் பக்கம் செலுத்தி விட்டான் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. அதன் பின்னர் நாம் அழ்ழாஹ்வின் வேதத்தை மாத்திரம் முற்றிலும் பின்பற்றும் ஒரு கூட்டமாக ஆகிவிடுவதன் மூலம் சுவனம் செல்லும் எமது ஆசையை அழ்ழாஹ்வின் அருளைக்கொண்டு நாம் அடைந்துகொள்ளலாம். ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களின் தோழர்கள் அழ்ழாஹ்வின் வேதத்தைப் பின்பற்ற வெண்டும் என்பதில் எவ்வளவு உறுதியுடன் இருந்தார்கள் என்பதற்கு ஒரு உதாரணத்தை உங்களுக்குத் தருகின்றோம்.

ஸஈத் பின் யஸார் (ரலியல்லாஹூ அன்ஹூ) கூறுகிறார்கள்:-
மக்காவுக்குச் செல்லும் வழியில் அப்துழ்ழாஹ் பின் உமர் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களுடன் சென்று கொண்டிருந்தேன். ஸுப்ஹை (அடைந்து விடுவோமோ என நான்) பயந்தபோது இறங்கி வித்ரைத் தொழுது கொண்டேன். பின்னர் அப்துழ்ழாஹ் (ரலியல்லாஹூ அன்ஹூ) (என்னை நோக்கி) "ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களிடத்தில் உமக்கு அழகான முன்மாதிரி இல்லையா?" எனக்கேட்டார்கள். 'அழ்ழாஹ் மீது சத்தியமாக இருக்கின்றது.'என (நான்) உடனே கூறினேன். (அதற்கு அவர்கள்) 'நிச்சயமாக ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்கள் ஒட்டகையின் மீது வித்ர் தொழக்கூடியவர்களாக இருந்தார்கள்.' எனக் கூறினார்கள்.
(ஸஹீஹுல் புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம் )
அழ்ழாஹ்வினால் பொருந்திக் கொள்ளப்பட்ட சமூகங்களில் உள்ளவர்களை நோக்கி அழ்ழாஹ்வின் தூதரிடத்தில் உமக்கு அழகிய முன்மாதிரி இல்லையா? எனக்கேட்டதும் அழ்ழாஹ் மீது சத்தியம் செய்து ஆம் எனக்கூறி அழ்ழாஹ்வின் வேதத்தை ஏற்றுக்கொள்கின்றார்கள். அதேபோன்று எமது சமூகத்தில் இருக்கின்ற மனிதர்களை நோக்கி இதே கேள்வியை நாம் கேட்கும்போது 'அழ்ழாஹ் மீது சத்தியமாக இருக்கின்றது.' எனும் பதிலைக் கூறி அதில் உண்மையாளர்களாகவும் நடந்துகொள்வார்களானால் நிச்சயமாக அவர்கள் நேர்வழியை அடைந்துவிடுவார்கள்.

எனவே இந்த அல்குர்ஆனிய வசனம் மக்களுக்கு உணர்த்தும் உண்மை என்னவெனில் நேர்வழி எமக்கு எத்திவைக்கப்பட்டுவிட்டது என்பதற்கு நபிமார்கள் மறுமைநாளில் சாட்சி சொல்வார்கள். எமக்கு நேர்வழியாகக் கொடுக்கப்பட்ட அழ்ழாஹ்வின் வேதம் முழுமையான வழிகாட்டலைக்கொண்டது. அதில் ஏனையவற்றை சேர்க்கவும் கூடாது, அதற்கான அவசியமும் கிடையாது. எனவே நேர்வழியை அடை வதற்கு மத்ஹபுகளோ, தரீக்காக்களோ, இயக்கங்களோ எந்த விதத்திலும் அவசியமானவையல்ல. குறைபாடுகளற்ற அழ்ழாஹ்வின் வேதத்தை மாத்திரம் பின்பற்றுபவர்களுக்கு அழ்ழாஹ்வின் நன்மாராயம் காத்திருக்கின்றது என்பதாகும்.

செயலாற்றுவதற்கு நம் உபதேசம்!

அழ்ழாஹ்வின் வேதம் குறைபாடற்றது என உறுதியாக நம்புங்கள்! எனவே நேர்வழியை அடைவதற்கு ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களின் காலத்தில் அவசியப்படாத மத்ஹபுகள், தரீக்காக்கள், இயக்கங்கள் எமக்கும் அவசியம் இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்தகொள்ளுங்கள்!!

No comments

Powered by Blogger.