தங்க வளையங்கள் அணிவது பெண்களுக்கும் தடுக்கப்பட்டுள்ளதா...?
- அபூ முஹம்மத் அல் முஹம்மதீ -
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்:-
தங்கமும் பட்டும் எனது உம்மத்தின்
பெண்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது!
(நஸாஈ கி. ஸீனா 40 - ஸஹீஹ்)
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் தீர்ப்பளிக்கின்றார்கள்:-
வேலைப்பாடுகள் செய்யப்பட்டே
அன்றி தங்கம் அணிவது கூடாது!
(நஸாஈ கி. ஸீனா 40 - ஸஹீஹ்)
நாஸிருத்தீன் அல்பானி கூறுவது:-
தங்க மோதிரமும் அதனைப் போன்ற
தங்கத்தினாலான காப்பு மாலை
என்பனவும் பெண்கள் மீது ஹராம்!
( ஆதாபுஸ் (z)ஸி(f)பா(f)ப் )
தங்கமும் பட்டும் எனது உம்மத்தின்
பெண்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது!
(நஸாஈ கி. ஸீனா 40 - ஸஹீஹ்)
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் தீர்ப்பளிக்கின்றார்கள்:-
வேலைப்பாடுகள் செய்யப்பட்டே
அன்றி தங்கம் அணிவது கூடாது!
(நஸாஈ கி. ஸீனா 40 - ஸஹீஹ்)
நாஸிருத்தீன் அல்பானி கூறுவது:-
தங்க மோதிரமும் அதனைப் போன்ற
தங்கத்தினாலான காப்பு மாலை
என்பனவும் பெண்கள் மீது ஹராம்!
( ஆதாபுஸ் (z)ஸி(f)பா(f)ப் )
இந்த சமூகத்தின் முதல் தலைமுறையினரைக்கொண்டே அல்லாஹ் அல்குர்ஆன் இதுதான் என்பதை வரையறையிட்டுவிட்டான். ஆனால் ஹதீஸ்கள் அனைத்தும் அவ்வாறு ஒரே தொகுப்பாக சேர்க்கப்படவில்லை. அல்குர்ஆனைப்போன்று அவை பாதுகாப்பானதாக இருந்தாலும் அவை ஒன்றுசேர்க்கப்படாமல் பல்வேறு தொகுப்புகளாகவே அவை பாதுகாக்கப்படுகின்றன. இந்த நிலையைப் பயன்படுத்தி இஸ்லாத்தின் எதிரிகள் சமூகத்தின் உள்ளே இருந்து கொண்டும், வெளியே இருந்துகொண்டும் பொய்யான பல செய்திகளை ஹதீஸ்களுடன் கலந்து விட்டார்கள். போலிகளுக்கு மத்தியில் சரியானவற்றை அடையாளம் காண்பது ஹதீஸ்கலை அறிஞர்களுக்கு மிக மிக எளிதானதே! இருந்தாலும் இவ்வாறு உண்மைகளுடன் போலி கலந்திருப்பது பொதுமக்களுக்குப் பெரும் சிரமமாகவே அண்மைக் காலம் வரை காணப்பட்டது.
ஆரம்பகால ஹதீஸ்கலை அறிஞர்கள் எந்த ஹதீஸையும் தவறவிடாது தங்களுக்குக் கிடைத்த அனைத்து ஹதீஸ்களையும் எழுதிப் பாதுகாத்தார்கள். அந்த ஹதீஸ்களை எடுத்து நம்பக மானவைகளையும், நம்பகமற்றவைகளையும் வேறு வேறாக பின்னால் வந்த அறிஞர்கள் வகுத்தார்கள். அவர்களுள் அண்மையில் வாழ்ந்து மறைந்த சிரியாவைச் சேர்ந்த அறிஞர் நாஸிருத்தீன் அல்பானி என்பவரும் ஒருவராவார். அவர் ஹதீஸ்கலைக்கு ஆற்றியுள்ள சேவை எவராலும் மறுக்க முடியாததாகும். அதேநேரம் அவர் செய்த தவறு என்னவெனில் தனக்கு அறிவில்லாத சட்டக்கலையில் தலையிட்ட தாகும். ஹதீஸ்களைத் தரம் பிரிப்பதில் தேர்ச்சி பெற்றிருந்த அவர் ஹதீஸ்களை ஒன்றுசேர்த்து விளங்கிக் கொள்வதில் பெரும் குறைபாடு உடையவராகவே இருந்துள்ளார். அவரது பிழையான பல தீர்ப்புக்களில் "பெண்கள் தங்க வளையங்களை அணியக் கூடாது" என்பதும் ஒன்றாகும். அந்தக் கருத்தின் தவறை அறியாத ஒரு சிலர் அதனை இலங்கையில் எடுத்துச் சொன்னதன் விளைவாக ஒரு சாரார் தடுமாற்றத்திற்குள்ளாகி விட்டனர். தமிழ் மொமி பேசும் அனைவரதும் நலன்கருதி இந்த ஆய்வு இங்கு தரப்படுகின்றது. தங்கத்திலான மோதிரம், வளையல், மாலை போன்றவை பெண்களுக்கும் ஹராமானது என ஹதீஸ்கலை அறிஞர் அல்பானி தீர்ப்புச் சொல்லியிருக்கின்றார். இதுபற்றி அவர் தனது நுலான "ஆதாபுஸ் (z)ஸி(f)பா(f)ப்" எனும் நூலில் எழுதியுள்ளார்.
"தங்க மோதிரமும் அதுபோன்றவையும் பெண்களுக்கு ஹராமானது" எனத் தலைப்பிட்டுவிட்டு அறிஞர் அல்பானி தனது நூலில் எழுதியுள்ளதாவது:-
தங்க மோதிரமும் அதனைப்போன்ற தங்கத்தினாலான காப்பு, மாலை என்பனவும் பெண்கள் மீது ஹராம் என்பதில் ஆண்களுடன் அவர்களும் சேர்கின்றார்கள் என்பதை அறிவீராக! அவர்களது விடயத்தில் குறிப்பான ஹதீஸ்கள் வந்துள்ளதனால் ஆண்களுக்கு என வரையறுக்கப் படாமல் பொதுவாக வந்துள்ள நேரடியான ஆதாரங்களில் அவர்களும் அடங்குவார்கள்.
(ஆதாபுஸ் ஸிபாப்)
ஓரிரு ஹதீஸ்களிலே அல்பானி தவறாகப் புரிந்தது போன்று தப்பர்த்தம் கொள்வதற்கு இடம்பாடு உள்ளதை அறிந்த அறிஞர்கள் அந்த ஹதீஸ்களுக்கு விளக்கம் எழுதும்போது இந்தக் கருத்தை மறுத்து பலவிதமான விளக்கங்களை ஏற்கனவே எழுதியுள்ளார்கள். அவ்வாறு எழுதப்பட்ட ஆறு வகையான மறுப்புகளுக்கு அல்பானி தனது அதே நூலில் பதிலும் எழுதியுள்ளார். அவற்றைப் படிக்கும் போது ஒரேயொரு விளக்கத்தைத் தவிர ஏனைய விளக்கங்கள் அல்பானியின் கருத்திலுள்ள தவறைத் தெளிவுபடுத்தக் கூடியதாக இல்லை என்பது தெரியவருகின்றது.
பெண்களுக்கும் தங்கத்தினாலான வளையங்கள் ஹராம் எனும் தீர்ப்பு உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில் வழங்கப் பட்டதா? எனப்பார்த்தால் அவ்வாறு இல்லை என்பதை அறியக் கூடியதாக உள்ளது. அல்லாஹ்வும் அவனது தூதரும் தடை செய்யாத ஒன்றை ஹராம் எனக் கூறுவது மிகப்பெரிய தவறாகும். பெண்கள் தங்க மோதிரம், வளையல், காப்பு போன்றவை அணிவது கூடாது என்பதற்கு அல்பானி நான்கு ஹதீஸ்களை ஆதாரமாக முன்வைத்துள்ளார். அதிலே நான்காவது ஹதீஸ் முர்ஸல் எனப்படக்கூடிய பலவீனமான ஹதீஸ்களின் பட்டியலில் இடம் பெறக் கூடியது என்பதை அவரே அந்த ஹதீஸின் கீழே எழுதியுள்ளார். அந்த ஹதீஸின் பொருளிலே முஸ்னத் அஹ்மதிலே வரக்கூடிய ஒரு அறிவிப்பின்பால் சுட்டிக்காட்டி முதல் அறிவிப்பை உண்மைப் படுத்த முயன்றுள்ளார். அந்த அறிவிப்பும் பலவீனமானது என்பதை மற்றொரு ஹதீஸ்கலை அறிஞர் நிரூபித்துள்ளார்.
அல்பானி தனது கருத்துக்கு ஆதாரமாக பலவீனமான ஹதீஸ் உட்பட நான்கு ஹதீஸ்களை முன்வைத்துள்ளார். அவை பெண்களுக்குத் தங்கம் ஆகுமாக்கப்பட்டுள்ளது எனக் கூறும் ஹதீஸின் கருத்தை மாற்றியமைக்கக் கூடியதாக உள்ளதா? என ஆராய்ந்தால் அவ்வாறு இல்லை என்பதே உண்மையாகும்.
பொதுவாக அனைத்து வகையான தங்க நகைகளும் பெண்களுக்கு ஆகுமானது எனும் இஸ்லாமியத் தீர்ப்பு பின்வரும் நேரடியான ஹதீஸினை ஆதாரமாகக் கொண்டதாகும்.
0 1 - ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்:-
தங்கமும் பட்டும் எனது உம்மத்தின் பெண்களுக்கு ஆகுமாக் கப்பட்டுள்ளது, அதன் ஆண்களுக்கு (அது) ஹராமாக்கப்பட்டுள்ளது.
(நஸாஈ கி. ஸீனா 40 - ஸஹீஹ்)
தங்கம் அணிவது பெண்களுக்கு ஒட்டுமொத்தமாக அனுமதிக்கப்பட்டது என்பதற்கு இந்த ஹதீஸ் தெளிவான ஆதாரமாகும். பெண்களுக்குத் தங்கம் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதனை இந்த ஹதீஸில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் தங்களது நாவினால் தெளிவாகக் கூறியுள்ளார்கள். இவ்வாறு வார்த்தைகளால் நேரடியாகக் கூறப்படும் ஆதாரங்கள் சட்டக் கலையில் வலுவான ஆதாரங்களாகும். தெளிவான, நேரடியான ஆதாரத்தினை அடிப்படையாகக் கொண்ட பெண்கள் தங்க வளையங்களை அணியலாம் எனும் தீர்ப்புக்கு முரணான தீர்ப்பை வழங்கியுள்ள அல்பானி: அதேபோன்ற நேரடியான ஆதாரங்களை முன்வைக்காத வரையில் அவரது தீர்ப்பு ஏற்கக் கூடியதல்ல. அல்பானியின் ஆதாரங்கள் எத்தகையவை? என்பதை நாம் இப்போது ஆய்வு செய்வோம். அவரது முதலாவது ஆதாரம் பின்வரும் ஹதீஸாகும்.
0 2 - ரஸூலுல்லாஹிஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்:-
யார் தனது நேசத்திற்குரியவருக்கு நெருப்பிலான ஒரு வளையத்தை அணிவிக்க விரும்புகின்றாரோ (அவர்) தங்கத்திலான ஒரு வளையத்தை அவருக்கு அணிவிக்கட்டும், யார் தனது நேசத்திற்குரியவருக்கு நெருப்பிலான ஒரு கழுத்தணியை அணிவிக்க விரும்புகின்றாரோ (அவர்) தங்கத்திலான ஒரு கழுத்தணியை அவருக்கு அணிவிக்கட்டும், யார் தனது நேசத்திற்குரியவருக்கு நெருப்பிலான ஒரு வளையலை அணிவிக்க விரும்புகின்றாரோ (அவர்) தங்கத்திலான ஒரு வளையலை அவருக்கு அணிவிக்கட்டும். ஆனால் வெள்ளியை நீங்கள் பயன்படுத்துங்கள்: அதனைக்கொண்டு (புகுந்து) விளையாடுங்கள்.
(அபூ தாவூத் கி. ஹாதம் 08 - ஹஸன்)
அல்பானியின் தீர்ப்பிற்கு அவர் இந்த ஹதீஸைத்தான் மிகப் பலமான ஆதாரமாக முன்வைத்துள்ளார். இதில் பெண்கள் தங்க வளையங்களை அணியக் கூடாது என்பது பற்றி எங்காவது கூறப்பட்டுள்ளதா? பெண்களுக்குத் தங்கம் அனுமதிக்கப்பட்டுள்ளது என ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவாகச் சொன்னதன் பின்னர் இந்த ஹதீஸைப் பெண்களுக்கும் தங்க வளையங்கள் ஹராம் என்பதற்கு அதாரமாகக் காட்டுவது அப்பட்டமான தவறாகும். இந்த ஹதீஸ் ஆண்களையும் பெண்களையும் சேர்த்தே குறிப்பதால் பெண்களுக்கும் தங்க வளையங்கள் ஹராம் என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரம் என்பதுதான் அல்பானியின் வாதமாகும். பொதுவாக வந்துள்ள ஹதீஸ்களுக்கு வரையறையாக வந்துள்ள ஹதீஸ்களைக் கொண்டு வரையறையிட வேண்டும் எனும் விதியை அழகாகச் சொல்லும் அல்பானி அதனை நடைமுறைப்படுத்தாதே இந்தக் குழப்பத்திற்குக் காரணமாகும். பொதுவாக எச்சரித்துச் சொல்லப்பட்ட ஹதீஸ்களை முன்னைய ஹதீஸுடன் இணைத்துப் பார்க்காமல் அவசரப்பட்டு அல்பானி தீர்ப்பு வழங்கியதால் அவரது தீர்ப்பு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் நேரடியான வார்த்தைக்கு முரணாகக் காணப்படுகின்றது.
பெண்களுக்குத் தங்கம் ஆகுமானது எனக் கூறுகின்ற ஹதீஸிற்கும், அது கூடாது என்பதற்கு ஆதாரமாக அல்பானி முன்வைத்த ஹதீஸிற்கும் இடையில் உண்மையில் எந்த முரண்பர்டும் கிடையாது. ஆண்களுக்குத் தங்கம் ஹராமானது என்பதை முதலாவது ஹதீஸிலே ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள். அந்த ஹராத்தைச் செய்பவர்கள் உலகிலே எவ்வாறான தங்க ஆபரணங்களை அணிகின்றார்களோ அதேபோன்ற நெருப்பினாலான ஆபரணங்கள் நரகிலே அவர்களுக்கு அணிவிக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப் படுவார்கள் என்பதை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் இரண்டாவது ஹதீஸிலே கூகின்றார்கள். இவ்வாறு ஒன்றை ஒன்று தெளிவு படுத்துவதாக இருக்கக்கூடிய ஹதீஸை அனாவசியமாக முன்னைய ஹதீஸுக்கு முரணாகப் பொருள்கொள்வது முற்றிலும் தவறானதாகும்.
நேரடியாகக் கூறப்பட்ட வார்த்தையும், ஆதாரங்களிலிருந்து விளங்கிய விளக்கமும் முரண்பட்டால்: நேரடியான வார்த்தைகள்தான் ஆதாரமாகக் ஏற்கப்படும். இங்கு பெண்களுக்குத் தங்கம் ஆகுமானது என்பது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களது நேரடியான வார்த்தையாகும். அது தடைசெய்யப்பட்டது என்பது அல்பானி விளங்கிய விளக்க மாகும். எனவே அல்பானியின் விளக்கம் நேரடியான ஹதீஸுக்கு முரணானது என்பதனால் அதனை ஒரு முஸ்லிம் ஒருபோதும் ஏற்க முடியாது, ஏற்கவும் கூடாது. இதனடிப்படையில் "தங்க வளையங்கள் பெண்களுக்கும் ஹராமானது" என்ற அல்பானியின் வாதம் அடிப்படை அற்றது என்றாகி விடுகின்றது.
இந்த ஹதீஸில் ஆண்கள் பெண்கள் என வேறுபடுத்தாமல் பொதுவாகக் கூறப்பட்டுள்ளதை ஆதாரமாகக் காட்டி பெண்களுக்கு ஆகுமானது எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ள தங்கத்தைத் தடைசெய்வதிலே எவராவது அடம் பிடித்தால் பெண்களுக்கு ஆகுமானது எனக் கூறப்பட்டுள்ள பட்டையும் பெண்களுக்கு ஹரமாக்க வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்படும். பின்வரும் ஹதீஸைப் பாருங்கள்:-
உக்பா பின் ஆமிர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் கூறுகின்றார்கள்:-
நிச்சயமாக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் தங்களது குடும்பத்தாரை ஆபரணங்கள், பட்டு போன்றவற்றை விட்டு தடுத்துக் கொண்டிருந்தார்கள். அத்துடன் "சுவனத்தின் ஆபரணங்களையும், அதன் பட்டையும் (நீங்கள்) விரும்புவதாக இருந்தால் அவற்றை உலகிலே அணியாதீர்கள்." எனவும் கூறுவார்கள்.
(நஸாஈ கி. ஸீனா 39 - ஸஹீஹ்)
இங்கு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் பாவித்திருக்கும் "அஹ்ல்" எனும் வார்த்தை குடும்பத்திலுள்ள ஆண்கள் பெண்கள் என இரு பாலாரையும் குறிக்கக்கூடியதாகும். தங்க வளையங்களைப் பெண் களுக்கு ஹராமாக்குபவர்களின் கொள்கைப்படி இந்த ஹதீஸைக் கொண்டு "பட்டு பெண்களுக்கு ஹராமானது." என அவர்கள் கூறவேண்டும். ஏன் அவ்வாறு அவர்கள் கூறுவதில்லை? தங்க வளையம் ஹராம் என்பதற்கு அவர்கள் கூறும் காரணம் இந்த ஹதீஸிலே காணப்படுகின்றது. தங்கத்துடன் பட்டையும் சேர்த்து இந்த ஹதீஸிலே கூறப்பட்டுள்ளதால் ஒன்றில் அவர்கள் பெண்களுக்கு தங்க வளையங்கள் ஹராம் எனும் அவர்களது சுய விளக்கம் தவறு என்பதை விளங்கி அந்தத் தவறிலிருந்து மீள வேண்டும். அல்லது குறைந்த பட்சம் அவர்களில் முரண்பாடு இல்லாமல் இருப்பதற்காக பெண்களுக்குப் பட்டும் ஹராம் எனக் கூறவேண்டும். அல்பானியின் கருத்துக்கு அவர் முன்வைக்கும் காரணங்கள் ஏற்கக் கூடியனவாக இல்லை என்பதை நேர்வழியைத் தேடுபவர்கள் இங்கு தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். நாம் சுட்டிக்காட்டியுள்ள இந்த ஹதீஸில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் குடும்பத்தாருக்கு "ஹில்யா"வைத் தடைசெய்தார்கள் என்று வந்துள்ளது. "ஹில்யா" எனும் வார்த்தையின் பொருள் ஆபரணம் என்பதாகும். வளையம் எனும் வார்த்தை ஹதீஸிலே வந்திருப்பதனால் தங்க வளையங்களை ஹராமாக்கும் அல்பானி ஆபரணங்களைத் தடைசெய்யும் இந்த ஹதீஸைக்கொண்டு "பெண்கள் எந்த ஆபரணத் தையுமே அணியக்கூடாது" என ஏன் பத்வா வழங்க வில்லை.....? "பெண்கள் மட்டுமல்ல, பெண்கள் ஆண்கள் என்ற வேறுபாடு இல்லாமல் முஸ்லிம்கள் எவருமே எந்தவொரு ஆபரணத்தையும் அணியக் கூடாது" என்பதாக அல்பானி இந்த ஹதீஸைக் கொண்டு பத்வா வழங்க வேண்டும். ஏனெனில் "ஹில்யா" எனும் வார்த்தை அனைத்து வகையான ஆபரணங்களையும் குறிக்கக்கூடியதாகும்.
ஹதீஸ்களை விளங்குவதற்கு ஏனைய ஹதீஸ்களையும், குர்ஆன் வசனங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே இஸ்லாமிய விதியாகும். இந்த ஹதீஸில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் எந்த ஆபரணங்களைத் தடைசெய்தார்கள் என்பதோ, அல்லது எந்த சராருக்குத் தடைசெய்தார்கள் என்பதோ கூறப்படவில்லை. அதனைத் கூறக்கூடிய வேறு ஹதீஸ்கள் எதனையும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறவில்லை என்றால் ஒட்டுமொத்தமாக ஆபரணங்கள் ஹராமானது என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடாக இருக்கும்.
ஆபரணங்கள் என்பது தங்கத்தை குறிக்கும் என்பதாக ஏனைய ஹதீஸ்கள் கூறுகின்றன. அதுவும் ஆண்களுக்கு மட்டுமே அது தடைசெய்யப்பட்டுள்ளது என்பதாகவும் ஏனைய ஹதீஸ்கள் கூறுகின்றன. இவ்வளவு தெளிவாக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் போதித்து விட்டுச் சென்ற இஸ்லாத்தை ஏன் நாம் குழப்பிக்கொள்ள வேண்டும்.
இதயசுத்தியுடன் உண்மையைக் கண்டறிவதற்கான அறிஞர்களின் ஒன்றுகூடல்கள் இத்தகைய தடுமாற்றங்கள் தனி மனிதர்களில் தோன்றி பொதுமக்களைத் தடுமாறச் செய்வதிலிருந்து பாதுகாப்பதற்கு இன்றியமையாததாகும்.
0 3 - ஸவ்பான் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் கூறுகின்றார்கள்:-
ஹுபைராவின் மகள் (ரலியல்லாஹூ அன்ஹா) தமது கையிலே மோதிரம் அணிந்தவராக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்தார். அப்போது அவரது கையிலே ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் (ஒரு தடியினால்) அடிக்க ஆரம்பித்தார்கள். உடனே (அப்பெண்) ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் தன்னுடன் நடந்துகொண்டது பற்றி முறைப்படுவதற்காக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் மகளாகிய பாதிமா ரலியல்லாஹூ அன்ஹா அவர்களிடம் சென்றார். அப்போது பாதிமா ரலியல்லாஹூ அன்ஹா தங்களது கழுத்திலே இருந்த தங்கத்தினாலான ஒரு மாலையைக் கழற்றி(க் காட்டி)விட்டு "ஹஸனின் தந்தை இதனை எனக்கு அன்பளிப்பாகத் தந்தார" எனக் கூறினார்கள். அந்த மாலை அவர்களது கையில் இருக்கும்போதே ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் அங்கு வந்தார்கள். "பாதிமாவே! அல்லாஹ்வின் தூதரது மகளின் கையிலே நெருப்பிலான ஒரு மாலை இருக்கின்றது என மக்கள் கூறுவது உமக்கு மகிழ்ச்சி அளிக்குமா?" எனக் கேட்டுவிட்டு உட்காராமல் (திரும்பி விட்டார்கள்.) உடனே பாதிமா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் அந்த மாலையை சந்தைக்கு அனுப்பி விற்றுவிட்டு, அந்தப் பணத்துக்கு ஓர் அடிமையை வாங்கி உரிமை இட்டார்கள். அது (ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்கு) அறிவிக்கப்பட்டது. அப்போது "(நரக) நெருப்பிலிருந்து பாதிமாவைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்." எனக் கூறினார்கள்.
(நஸாஈ கி. ஸீனா 39 - ஸஹீஹ்)
பெண்களுக்கும் தங்கத்தினாலான வளையங்கள் ஹராம் என்பதற்கு அல்பானி முன்வைத்துள்ள இரண்டாவது ஆதாரமாகிய இந்த ஹதீஸை நன்றாகப் படித்துப்பாருங்கள். "பெண்களுக்குத் தங்க வளையங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது" என்ற வாசகம் இந்த ஹதீஸிலாவது காணப் படுகின்றதா? அல்லது மறைமுகமாகவேனும் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதா? எதுவுமே இல்லை. அப்படியானால் பெண்களுக்கும் தங்க வளையங்கள் ஹராம் என்பதை நிரூபிப்பதற்கு அல்பானி இந்த ஹதீஸை ஏன் முன்iவாத்தார் என்ற சந்தேகம் உங்களுக்கு இங்கு ஏற்படும். முதலாவதாக முன்வைத்த ஹதீஸிலிருந்து அல்பானி சுயமாக விளங்கிக்கொண்டது போன்று இந்த ஹதீஸிலிருந்தும் "பெண்களுக்கு தங்க வளையங்கள் அணிவது ஹராம்" என அவர் விளங்கியதன் காரணமாகவே இந்த ஹதீஸை ஆதாரமாக முன்வைத்துள்ளார்.
இந்த ஹதீஸில் பெண்களுக்குத் தங்க வளையங்கள் ஹராம் என்பது கூறப்படாவிட்டாலும் பெண்கள் தங்கம் அணிவதில் ஏதோ நிபந்தனை உள்ளது என்பதை நீங்கள் உணருவீர்கள். அதற்குக் காரணமாக இரு விடயங்கள் இந்த ஹதீஸிலே இடம்பெற்றுள்ளன.
ஹுபைராவின் மகளின் கையிலே இருந்த மோதிரத்தை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு தடியைக் கொண்டு அடித்தார்கள் என்பது அதில் முதலாவது விடயம். பாதிமா ரலியல்லாஹூ அன்ஹா அவர்களின் கையில் தங்க மாலை இருந்ததைக் கண்டபோது "அல்லாஹ்வின் தூதரது மகளின் கையிலே நெருப்பிலான ஒரு மாலை இருக்கின்றது என மக்கள் கூறுவது உமக்கு மகிழ்ச்சி அளிக்குமா?" என ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கேட்டது இரண்டாவது விடயமாகும்.
அவை வட்ட வடிவில் காணப்பட்டதே காரணம் என்பது அல்பானியின் முடிவாகும். இரண்டாவது ஹதீஸிலே "ஹல்கா"(வட்ட வடிவம்), "தவ்க்"(வளையம்) போன்ற வாhத்தைகள் பயன்படுத்தப் பட்டுள்ளதைத் தவிர அந்த விளக்கத்தை உண்மைப்படுத்தும் வேறு எந்த ஆதாரமும் அவரிடம் அறவே கிடையாது. "தங்கமும் பட்டும் எனது உம்மத்தின் பெண்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது" எனும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களது நேரடியான தீர்ப்புக்கு முரணாக ஹதீஸிலே வரும் வார்த்தையை விளங்குவது அல்பாணியின் அடிப்படைத் தவறுகளில் ஒன்றாகும்.
பெண்களுக்குத் தங்கம் ஆகுமாக்கப்பட்டுள்ளது எனக் கூறிய அதே ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தங்கம் அணிந்திருந்த பெண்களைக் கண்டித்ததற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்பதை நாம் ஹதீஸ்களின் மூலம் அறிந்துகொள்ள வேண்டும். அந்தக் காரணம் "தங்கமும் பட்டும் எனது உம்மத்தின் பெண்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது" எனும் நேரடியான ஹதீஸிற்கு முரண்படக் கூடியதாக ஒருபோதும் இருக்கக் கூடாது. ஏனெனில் வஹியைக் கொண்டு கதைக்கக்கூடிய ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் முரண்படத் தக்கவாறு ஒருபோதும் கதைக்க மாட்டார்கள் என்பதை சாதாரண அறிவுள்ளவர்களும் விளங்கிக் கொள்ளலாம்.
0 4 - அபூ ஷ{ஐப் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் கூறுகின்றார்கள்:-
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் அவர்களிடம் ஒரு பெண் வந்தார். அவரு டன் அவரது மகளும் இருந்தாள். அவளது கையிலே தங்கத்தினாலான கனதியான இரண்டு காப்புகள் இருந்தன. அப்போது அவளை நோக்கி "இதற்குரிய ஸகாத்தைத் கொடுக்கின்றாயா?" எனக் கேட்டார்கள். (அதற்கு) "இல்லை" எனக் கூறினாள். (உடனே) "மறுமைநாளில் அந்த இரண்டிற்கும் பகரமாக அல்லாஹ் உனக்கு நெருப்பினாலான இரண்டு காப்புகள் அணிவிப்பது உனக்கு மகிழ்ச்சியைத் தருமா?" எனக் கேட்டார்கள். உடனே (அவள்) அந்த இரண்டையும் கழட்டி நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின்பால் போட்டுவிட்டு "அந்த இரண்டும் கண்ணியமும், மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்குமாகும்" எனக் கூறினாள்.
(அபூ தாவூத் கி. ஸகாத் 04 - ஹஸன்)
தங்கத்தினாலான வளையம் அணிந்திருந்ததுதான் தங்கம் அணிந்திருந்த பெண்களை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கண்டித்ததற்கான காரணம் எனக்கூறுவது தவறானது என்பதனை இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுகின்றது. தங்கத்தினாலான வளையல் அணிவதே ஹராமானதாக இருக்குமானால் அதற்கு ஸகாத் கொடுக்கின்றாயா என ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் ஏன் கேட்கின்றார்கள்..........?
ஸகாத் செலுத்தப்படாத நகைகளை அணிந்தவர்களை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கண்டித்துள்ளார்கள் எனத் தெளிவாகக் கூறக்கூடிய இந்த ஹதீஸை அல்பானி புறக்கணிக்கும் விதத்தைப் பாருங்கள்:-
தங்கம் ஆகுமானதாக இருந்தபோதுதான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என்பது தெளிவானது. ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் அதனை ஹராமாக்குவதில் படிமுறைகளைக் கையாண்டுள்ளார்கள். முதலில் அதற்கு ஸகாத்தைக் கடமையாக்கினார்கள், பின்னர் அதனை ஹராமாக்கினார்கள். முன்னால் கூறப்பட்ட ஹதீஸ்களில் விஷேடமாக முதலாவது ஹதீஸில் தெளிவாக அது கூறப்பட்டுள்ளது.
( ஆதாபுஸ் ஸிபாப் )
எது முந்தியது? எது பிந்தியது? என அறியாமல் தங்கம் ஆகுமானதாக இருந்தபோதுதான் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது என எழுதிய அல்பானி: அவ்வாறு செய்வது தவறானது என அவருக்குத் தேவைப்படுகின்றபோது அதேநூலில் எழுதியுள்ளார்.
பெண்களுக்குத் தங்க வளையங்கள் ஹராம் எனும் அல்பானியின் தீர்ப்பை ஏற்க விரும்பாத ஒரு சிலர் அல்பானி முன்வைத்த ஹதீஸ்களை ஆய்வு செய்யாமல் "அந்த ஹதீஸ்கள் மாற்றப்பட்டு விட்டன" என எழுதியுள்ளார்கள். அது தவறானது என்பது பற்றி எழுதும்போது அல்பானி எழுதியுள்ளதைப் பாருங்கள்:-
அது தவறான ஒரு வாதமாகும். ஏனெனில் ஒரு சட்டம் மாற்றப்பட்டது எனக் கூறுவதற்கு அதிகமான நிபந்தனைகள் உள்ளன என்பது அறிஞர்கள் அறிந்ததே! மாற்றப்பட்ட சட்டத்தைவிட புதிய சட்டம் பற்றிய அறிவிப்பு பிந்தி வந்திருப்பதும், அந்த இரண்டும் முரண்படாத விதத்தில் பொருள் கொள்ள முடியாமல் இருப்பதும் அந்த நிபந்தனைகளில் உள்ளதாகும். இவ்விரண்டு நிபந்தனைகளும் இந்த இடத்தில் இல்லை. முதலாவது நிபந்தனை: தடைசெய்யக்கூடிய ஹதீஸ்களைவிட இந்த ஹதீஸ் பிந்திக் கூறப்பட்டது என்பது அறியப்படவில்லை. இரண்டாவது நிபந்தனை: இங்கு குறிப்பிடப் பட்டிருக்கும் ஹதீஸ் உட்பட அந்தக் கருத்தில் வரக்கூடியவற்றிற்கும், முன்னால் கூறப்பட்ட ஹதீஸ்களுக்கும் இடையில் முரண்படாத விதத்தில் பொருள் கூறுவது இலகுவாக செய்யக்கூடியதாகும்.( ஆதாபுஸ் ஸிபாப் )
அபூ ஷூஐப் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் அல்பானி முன் வைத்த ஹதீஸ்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது என்பதனை அல்பானி நிரூபிக்கவும் இல்லை. அவற்றிற்கிடையில் முரண்பாடு இல்லாமல் செயல்படுத்துவது முடியாமலும் இல்லை. அப்படியிருக்கும் போது இந்த சம்பவம் தங்கம் ஆகுமானதாக இருந்தபோது நடந்தது எனக் கூறுவது முன்னுக்குப் பின் முரணாகும்.
பிற்காலத்தில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் தங்கத்தைப் பெண்களுக்குத் தடைசெய்தார்கள் என அல்பானி எழுதியுள்ளார். இது எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் சொல்லப்பட்டதாகும். மாறாக பெண்களுக்குத் தங்கம் ஆகுமாக்கப்பட்டுள்ளது எனும் ஹதீஸுக்கு முரணான கூற்றாகும். இந்தத் தவறான கூற்றை அடிப்படையாக வைத்து ஸகாத் கொடுக்காத காரணத்தினால் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் தங்கம் அணிந்திருந்த பெண்களைக் கண்டித்தார்கள் என்பதாக வந்துள்ள ஹதீஸ் மாற்றப்பட்டது எனக் கூறுவது மகா தவறாகும்.
0 5 - அபூ ஷைஹ் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் கூறுகின்றார்கள்:-
முஆவியா ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அவர்களது ஹஜ்களில் ஒன்றிலே நாங்கள் அவர்களுடன் இருந்தபோது முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் தோழர்களில் நின்றும் ஒரு சிலரை ஒன்று சேர்த்தார்கள். (பின்னர்) அவர்களை நோக்கி "வேலைப்பாடுகள் செய்யப்பட்டேயன்றி தங்கம் அணிவதை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் தடைசெய்தார்கள் என்பதை (நீங்கள்) அறியமாட்டீர்களா?" எனக் கேட்டார்கள். (அதற்கு) "யா அல்லாஹ்! ஆம்!" எனக் கூறினார்கள்.
(நஸாஈ கி. ஸீனா 40 - ஸஹீஹ்)
பெண்கள் தங்கம் அணிந்திருந்த சில சந்தர்ப்பங்களில் அவர்களை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கண்டித்துள்ளார்கள் என்பதை நாம் சில ஹதீஸ்களில் காணக்கூடியதாக உள்ளது. தடைசெய்யப்பட்ட விடயங்களில் கண்டிப்புடன் நடந்து கொள்வதே ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் வழக்கமாகும். எனவே காரணம் சொல்லாமல் ரஸூலு ல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கண்டித்ததாக வருகின்ற ஹதீஸ்களுக்கு விளக்ககமாக வேறு ஹதீஸ்களில் அதற்கான காரணம் கூறப்பட்டிருப்பதை நாம் காணக்கூடியதாக உள்ளது. அவ்வாறான ஒரு காரணத்தை இந்த ஹதீஸ் எமக்குத் தெளிவுபடுத்துகின்றது. அதாவது பெண்களுக்குத் தங்கம் ஆகுமாக்கப்பட்டிருந்தாலும் தேவைக்கேற்றவாறு அது வெட்டப்பட்டு, வேலைப்பாடுகள் செய்யப்பட்டதாக இல்லாவிட்டால் அதனை அணிவதனை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் தடைசெய்தார்கள்.
பெண்கள் தங்க வளையங்கள் அணியக் கூடாது என ஹதீஸ் கலை அறிஞரான நாஸிருத்தீன் அல்பானி கூறுவதற்குக் காரணம் இரண்டு விடயங்களை அவர் தவறாக விளங்கியதாகும்.
இந்த ஹதீஸிலே வரக்கூடிய "முகத்தஅன்" எனும் அறபுச் சொல்லை அவர் ஹதீஸுக்கும், அறபு மொழிக்கும் மாற்றமாக விளங்கிக்கொண்டது அவரது முதலாவது தவறாகும். அவரது இரண்டாவது தவறு "பெண்களுக்கும் தங்க வளையங்கள் ஹராம்" எனும் அவரது தீர்ப்புக்கு ஆதாரம் என நினைத்து அவர் முதலாவது முன்வைத்த ஹதீஸிலே இருக்கும் "ஹல்கா (வட்ட வடிவம்)' "தவ்க் (வளையம்)' போன்ற வார்த்தைகளைத் தங்க ஆபரணங்களைக் கண்டித்ததற்கான காரணம் என அவர் விளங்கியதாகும்.
ஸஹபாபாக்களை சாட்சியாக வைத்து முஆவியா ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸில் பெண்களுக்கு "முகத்தஃ" செய்யப்படாமல் தங்கம் அணிவது தடைசெய்யப்பட்டுள்ளது. "முகத்தஃ" எனும் வார்த்தையை நாம் "வேலைப்பாடுகள் செய்யப்பட்டது" என மொழி பெயர்த்துள்ளோம். அல்பானி இந்த ஹதீஸை அவரது ஆதாரங்களில் கொண்டுவரவில்லை. ஆனால் இந்த ஹதீஸில் பயன்படுத்தப்பட்டுள்ள "முகத்தஃ" எனும் வார்த்தைதான் அவரது தவறான தீர்ப்பின் அடிப்படையாகும். "முகத்த" எனும் சொல்லுக்கு "துண்டிக்கப்பட்டது" எனும் பொருளும் உண்டு. அந்தப் பொருளின் அடிப்படையில்தான் வட்ட வடிவமான தங்கத்தை அணியக்கூடாது என அல்பானி எழுதியுள்ளார். தெளிவான ஆதாரம் இல்லாமல் அவராக இப்படி ஒன்றை விளங்கிக்கொண்டு தங்க வளையங்களைப் பெண்களும் அணியக் கூடாது எனக் கூறும் அல்பானி அதில்கூட உறுதியாக இல்லை. ஏனெனில் அதனைக் காதிலே அணியலாம் என அவர் கூறுகின்றார். துண்டிக்கப்படாமல் முழு வட்ட வடிவமாக இருப்பதுதான் மோதிரம், காப்பு, மாலை போன்றவை அணிவதற்குத் தடையான காரணம் எனக் கூறிவிட்டு, அதே காரணம் இருக்கின்ற காதணியை மட்டும் ஆகுமானது என எழுதியிருப்பது அவரது தடுமாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
அறிஞர் அல்பானி எழுதியுள்ளதாவது:-
சிலவேளைகளில் வளையம் காதிலும் அணியப்படும். அப்போது அது(பின்னால்) வருவது போன்று "குர்த்" (காதில் அணியும் வளையம்) எனக் கூறப்படும். வளையங்களைத் தடைசெய்யும் ஹதீஸ் இதனை உள்ளடக்காது என்பது வெளிப்படையானது. இருந்தாலும் இதுவும் ஹராமானது எனக்கூறும் சில ஹதீஸ்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. அவற்றிலே பலவீனம் காணப்படுகின்றது.
(ஆதாபுஸ் ஸிபாப்)
அல்பானி எழுதியுள்ள தீர்ப்பில் அவருக்கே தடுமாற்றம் உள்ளது என்பதற்குத் தெளிவான சான்றாக மேலே அவர் எழுதியுள்ள கூற்று அமைந்துள்ளது. ஆண்களுக்குத் தங்க நகைகள் ஹராம் என்று இஸ்லாம் கூறியிருக்கும்போது "தங்க மோதிரத்தை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் களைந்து எறிந்துள்ளார்கள். ஆனால் தங்கத் தினாலான கைப்பட்டியைக் களைந்து எறிந்ததாக ஹதீஸ்கள் இல்லை. எனவே அது ஆண்களுக்கு ஆகுமானதே என எவரேனும் வாதித்தால் அவரது அறிவு எவ்வளவு பலவீனமானதாக இருக்கும் என சிந்தித்துப் பாருங்கள். இந்த வாதத்திற்கும், "தங்க வளையங்கள் பெண்களுக்கும் ஹராமானது. ஆனால் காதிலே அணியும் வளையங்களைத் தடை செய்யும் ஹதீஸ்கள் இல்லை என்பதனால் அதனைப் பெண்கள் காதில் மாத்திரம் அணியலாம்." எனும் அல்பானியின் வாத்திற்கும் இடையில் எந்த வித்தியாசமும் கிடையாது. "விரலிலும், மணிக்கட்டிலும், கழுத்திலும் தங்க வளையம் அணியக் கூடாது. ஆனால் அதனைக் காதிலே அணிந்து கொள்ளலாம்." எனும் கருத்தை இஸ்லாத்தின் தீர்ப்பாகச் சொல்லும் அல்பானியின் செயல் நகைப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.
எவர் எதனைக் கூறினாலும் சத்தியத்தின்படி நடக்க விரும்புபவர்கள் உண்மையை விளங்கிக்கொள்வது அவசியமாகும். "முகத்தஃ" எனும் சொல்லிற்கு அல்பானி விளங்கியிருக்கும் கருத்து சநியானதுதானா? எனவும் நாம் அலசிப்பார்க்க வேண்டும். அதன் மூலமும் அல்பானியின் தீர்ப்பின் நிலையை அறிந்துகொள்ளலாம். ஹதீஸிலே வந்துள்ள "முகத்தஅன்" எனும் சொல்லின் சரியான பொருளை மக்கள் அறிந்துகொள்வதற்காக அறபு மொழி அறிஞர் களின் அகராதிகளில் இந்த சொல்லுக்கு அவர்கள் எழுதியுள்ள கருத்தை இப்போது உங்கள் முன் வைக்கின்றோம்.
ஷம்ர் என்பவரிடமிருந்து கிடைத்திருப்பதாவது:-
நிச்சயமாக சுற்றிவைக்கும் போர்வைகள், அலங்காரம் இடப்பட்ட போர்வைகள், மேற்போர்வைகள், அது போன்றவைகள் இல்லாமல் துண்டு துண்டாக வெட்டித் தைக்கப்படும் மேலங்கி, சட்டை மற்றும் அது போன்ற வையே "முகத்தஆத்" எனப்படும்.
(அல் பாயிக் லில் இமாம் ஸமஹ்ஷரி)
அபூ உபைத் என்பவர் எழுதியுள்ளதாவது:-
வளையங்கள், சிறு தங்கத் துண்டு மற்றும் அது போன்று: ஒரு பொருளின் சிறிதளவு பகுதி "அல் முகத்தஃ" எனப்படும்.
(தஹ்தீபுல் லுகா - லி அபீ மன்ஸூர்)
"அல்முகத்தஃ" எனும் அறபுச் சொல்லிற்கு இரண்டு அகராதி களில் எழுதப்பட்டுள்ள பொருளையே நீங்கள் மேலே காண்கின்றீர்கள்.
முழுமையான துணியை "முகத்தஃ" எனக்கூற முடியாது. மாறாக அதனைத் துண்டு துண்டாக வெட்டி, ஆடையாகத் தைத்துக் கொண்டால் அது "முகத்தஃ" எனப்படும் என்பது இமாம் ஸமஹ்ஷரி அவர்களின் அகராதியில் எழுதப்பட்டுள்ளது. எனவே தங்கக் கட்டியை நாம் எடுத்து, அதனைத் தேவைக்கேற்றவாறு வெட்டி, ஒட்டி ஆபரணமாக மாற்றினால் அது "முகத்தஃ" எனப்படும் என்பது இப்போது உங்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவாக விளங்குகின்றதல்லவா....? இவ்வாறு தேவைக்கேற்ற வேலைப்பாடுகள் செய்யப்பட்டவை தடைசெய்யப்படவில்லை என்பது இந்த ஹதீஸின் மூலமும் மிகத்தெளிவாக நிரூபணமாகின்றது. இந்த ஹதீஸிலே மட்டும் காணப்படும் முகத்தஃ எனும் வார்த்தையின் பொருளைப் பயன்படுத்தும் அல்பானி இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு வராமல் இருந்ததானது அவரது தீர்ப்பு தவறு என்பதற்கான ஆதாரம் இதில் இருப்பதை விளங்கிக்கொண்டதும் காரணமாக இருக்கலாம்.
அல்பானி முகத்தஃ என்பதன் பொருளை நேர்முரணாக விளங்கியுள்ளார் என்பதை தஹ்தீபுல் லுகா எனும் அகராதியில் "அல்முகத்தஃ" எனும் சொல்லுக்கு எழுதப்பட்டிருக்கும் பொருளும்; பறை சாற்றுகின்றது. ஏனெனில் முதத்தஃ என்பதற்கு உதாரணமே வளையம் என அதிலே எழுதப்பட்டுள்ளது. வளையம் முகத்தஃ இல்லை என்பது அல்பானியின் விளக்கமாகும். வளையம் முகத்தஃ இல்லை என்பதற்கு அவர் குர்ஆன் ஹதீஸில் ஆதாரம் காட்டவும் இல்லை, மொழி ரீதியில் நிரூபிக்கவும் இல்லை.
தங்க வளையங்கள் பெண்களுக்கும் ஹராமானது என தவறான தீர்ப்பை முன்வைக்கும் அல்பானி அதற்கான ஆதாரமாக முன்வைத்துள்ள நான்கு ஹதீஸ்களில் இரண்டு ஹதீஸ்களை எடுத்து. அவற்றில் அவரது கருத்துக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்பதை இதுவரை நாம் தெளிவாக விளக்கியுள்ளோம்.
நஸாஈ, பஸ்ஸார் போன்றவற்றில் வருவதாக மூன்றாவதாக அல்பானி முன்வைத்திருக்கும் ஹதீஸும் அவரது தீர்ப்பை உண்மைப் படுத்தவில்லை. அந்த ஹதீஸ் கூறுவதைக் கவணியுங்கள்:-
தங்க முலாமிடப்பட்ட இரண்டு காப்புகள் ஆயிஷh ரலியல்லாஹூ அன்ஹா அவர்களின் கையிலிருப்பதைப் பார்த்த ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் "அந்த இரண்டையும் எறிந்துவிட்டு வெள்ளியிலான இரண்டு காப்புகளைச் செய்துகொள்வீராக! அத்துடன் அவற்றைக் குங்குமத்தைக் கொண்டு நிறமூட்டிக் கொள்வீராக!" எனக் கூறியதாக உள்ளது. இந்த ஹதீஸை ஸஹீஹானதாகவே நாம் ஏற்றுக் கொண்டால்கூட தங்கத்தினாலான வளையங்கள் அணியக் கூடாது எனக் கூறுவதற்கு இதிலே என்ன ஆதாரம் உள்ளது? தங்கமுலாம் பூசப்பட்ட காப்பைத் எறிந்துவிடும்படி கூறியதை வைத்து தங்க வளையங்கள் ஹராமானது என அல்பானி சட்டம் கூறியிருப்பது ஹதீஸ்களைத் தரம் பிரிப்பதில் திறமையுடைய அல்பானிக்கு சட்டக்கலையில் தேர்ச்சி போதாது என்பதை எடுத்துக்காட்டுகின்றது.
நான்காவது ஒரு ஆதாரத்தை அல்பானி தனது தீர்ப்பிற்கு ஆதாரமாக முன்வைத்துள்ளார். அது பலவீனமான வகையைச் சேர்ந்தது என்பதை அவரே சுட்டிக்காட்டிவிட்டு முஸ்னத் அஹ்மதிலே வரக்கூடிய ஒரு அறிவிப்பை அதற்குப் பக்க பலமாக முன் வைத் துள்ளார். அதுவும் பலவீனமானது என்பதை அல்பானியைப் போன்று ஹதீஸ்களைத் தரம் பிரிப்பதில் சிறந்த அறிஞர்களுள் ஒருவரான ஷூஐப் அல்அர்னஊத் எனும் அறிஞர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த நான்கு ஹதீஸ்கள்தான் அல்பானி வழங்கிய மார்க்கத் தீர்ப்பிற்கான ஆதாரங்கள். இந்த ஹதீஸ்களைக் குறித்தே "தங்க வளையங்களைப் பெண்களுக்கு நேரடியாகத் தடை செய்யும் ஹதீஸ்கள்" என அல்பானி அவரது நூலில் பல விடுத்தம் எழுதியுள்ளார். அவர் முன்வைத்த பலவீனமான ஹதீஸில்கூட "தங்க வளையங்களைப் பெண்கள் அணியக்கூடாது" என நேரடியாகத் தடைசெய்யும் வாசகம் கிடையாது. குறைந்தபட்சம் அல்பானி தனது கருத்துக்கு ஆதாரமாக முன்வைத்த ஹதீஸ்கள் அந்தக்கருத்தைக் மறைமுகமாகக் கூறுவதாகக்கூட இல்லை. இந்த நிலையில் அல்பானியின் தீர்ப்பைப் பின்பற்றினால் எமது நிலை என்னவாகும்? அல்லாஹ் எங்கள் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக!
No comments