அமீர் ஒர் ஆய்வு - பகுதி 2
- சவாலும் பதிலும்!
- உலுல் அம்ர் என்போர் யார்?
- ஹதீஸ்களைத் திரிபு படுத்தல்!
- நரகின்பால் அழைக்கக்கூடிய பிரிவுகள் நபி (ஸல்) அவர்களின் வழித்தோன்றல்கள்?
- பி.ஜெ யின் கேள்விகளும் அவற்றிற்கான பதில்களும்.
- பி.ஜெ யும்! சந்தர்ப்ப வாதமும்!
- பி.ஜெ யின் அபாண்டங்களும், ஜாஹிலிய்யக் கருத்துக்களும்!
- இறுதியாக........
- சவாலும் பதிலும்!
எனவே நாம் ஒருவரை அமீர் என்று கூறுவதானால் அவரை அமீராக நியமித்த இமாம் ஒருவர் இருந்தாக வேண்டும். அல்லது அவருக்கு மேலே ஒரு இமாம் இல்லாவிட்டாலும் அவருக்கு அமீர் எனக் கூறுவதற்கு ஒரேயொரு ஆதாரத்தையாவது அவர்கள் எடுத்துக் காட்ட வேண்டும். ஆனால் அப்படி ஒரு ஆதாரமும் நாம் தேடிய வரையில் இல்லை.
(அலமுபீன 1999 மார்ச் - பக்கம்23)
ஒருவரை அவருக்கு மேலே இமாம் இல்லாவிட்டாலும் அமீர் எனக் கூறுவதற்கு ஒரேயொரு ஆதாரமாவது கேட்டிருக்கும பி.ஜெ. எவரேனும் ஒரு ஆதாரத்தைக் காட்டிவிட்டால் தானும் வழிகெட்டு, பிறரையும் வழிகெடுப்பதை விட்டுவிட்டு சத்தியத்தை ஏற்றுக்கொள்வாரா? பி.ஜெ. நேர்வழி பெறுகிறாரோ இல்லையோ சத்தியத்தைத் தெளிவாக எத்தி வைப்பது முஸ்லிம்களின் கடமை என்பதால் பி.ஜெ. கேட்டிருக்கும் விடயத்திற்கு பல ஆதாரங்கள் இருந்தாலும் இரண்டேயிரண்டு ஆதாரங்களை மட்டும் இங்கு குறிப்பிடுகின்றோம்.
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹுஅன்ஹு) கூறுவதாவது:-
உயைனா இப்னு ஹிஸ்ன் என்பவர் தனது சகோதரனின் மகனாகிய ஹுர்ரிப்னு கைஸ் என்பவரிடம் வந'தார். அவரோ உமர் (ரழியல்லாஹுஅன்ஹு) தம்மிடம் நெருக்கமாக வைத்திருப்போரில் நின்றும் உள்ளவராவார். ஆல்குர்ஆனை நன்கு மனனமிட்டு, ஓதக் கூடியவர்களே (ரழியல்லாஹுஅன்ஹு) அவர்களது சபையிலே அமரக்கூடியோராகவும், அவர்களுக்கு ஆலோசனை கூறக் கூடியோராகவும் இருந்தனர். அவர்கள் வயதில் கூடியவர்களாக இருந்தாலும் சரி அல்லது இளைஞர்களானாலும் சரி. உயைனா தனது சகோதரனின் மகனிடத்தில் 'எனது சகோதரனின் மகனே! எனக்காக இந்த அமீரிடத்தில் அனுமதி பெறுமளவிற்கு உனக்கு அவரிடத்தில் மதிப்பிருக்கின்றதா?' ஏனக் கேட்டார். அதற்கவர், அவரிடம் செல்வதற்கு உங்களுக்காக நான் அனுமதி பெறுகிறேன் எனக் கூறினார். இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹுஅன்ஹு) கூறுகிறார்கள்- உயைனா, அவருக்கு அனுமதிபெற்றார். அவர் (உமர் (ரழியல்லாஹுஅன்ஹு) அவர்களிடத்தில்) வந்ததும் 'ஹத்தாபின் மகனே! எமக்கு நீர் (சொத்துக்களில்) பங்கு தருவதில்லை. எமக்கு மத்தியில் நீதமாக தீர்ப்பளிப்பதும் இல்லை எனக் கூறினார். உடனே அவரைத் தண்டிக்குமளவிற்கு உமர் (ரழியல்லாஹுஅன்ஹு) கோபமடைந்தார்கள். அப்போது ஹுர் கூறினார் – விசுவாசிகளின் அமீர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் தனது நபிக்கு 'நீர் மன்னிப்பைக் கைக்கொண்டு நன்மையை ஏவி வருவீராக! மேலும் அறிவீனர்களைப் புறக்கணித்து விடுவீராக!' (7:199) எனக் கூறுகிறான். நிச்சயமாக இவர் அறிவீனர்களில் நின்று முள்ளவர். அல்லாஹ் மீது சத்தியமாக உமர் (ரழியல்லாஹுஅன்ஹு) மீது அந்த (குர்ஆனிய வசனம்) ஓதப்பட்ட போது அதனை அவர்கள் மீறவில்லை. அல்லாஹ்வுடைய வேதம் கூறப்படும் போது உடனடியாக கட்டுப்படக் கூடியவர்களாக அவர்கள் இருந்தார்கள்.
(ஸஹீஹுல் புஹாரி – கி. இஃதிஸாம் பில் கிதாபி வஸ்ஸுன்னா )
ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்கள் மரணித்துவிட்டதன் பின்னால் (ஹலீபா பற்றி ஆலோசனை செய்வதற்காக) சகீபா பனூசாயிதாவிலே ஸஃதிப்னு உபாதா (ரழியல்லாஹுஅன்ஹு) வின் பால் அன்ஸார்கள் ஒன்று கூடினர். அப்போது எங்களில் ஒரு அமீர், உங்களில் ஒரு அமீர் (ஏற்படுத்துவோம்) எனக் கூறினர். அப்போது அபூபக்கர் (ரழியல்லாஹுஅன்ஹு), உமர் (ரழியல்லாஹுஅன்ஹு), அபூஉபைதா பின் ஜர்ராஹ் (ரழியல்லாஹுஅன்ஹு) ஆகியோர் அங்கு சென்றனர். உமர் (ரழியல்லாஹுஅன்ஹு) கதைக்க முனைந்த போது அபூபக்கர் (ரழியல்லாஹுஅன்ஹு) அவர்களை அமைதியாக இருக்கச்செய்து விட்டு இல்லை. எனினும் நாம் அமீர்களாக இருப்போம். நீங்கள் அமைச்சர்களாக இருங்கள். அவர்கள் தான் குடும்பத்தால் சிறந்தவர்கள். கோத்திரத்தால் உயர்ந்தவர்கள். எனவே உமரிப்னுல் ஹத்தாப் (ரழியல்லாஹுஅன்ஹு) அல்லது அபூஉபைதா பின் ஜர்ராஹ் (ரழியல்லாஹுஅன்ஹு) அவர்களுக்கு பையத்துச் செய்யுங்கள் எனக் கூறினார்கள்.
(ஸஹீஹுல் புஹாரி.கி.ப.அஸ்ஹாபின்னபி)
ஒரேயொரு ஆதாரம் கேட்டவருக்கு இரண்டு ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எந்த ஹலீபாவுடைய காலத்தில் அமீருல் முஃமினீன் எனும் வார்த்தை அறிமுகமானதாக பி.ஜெ கூறுகின்றாறோ, அதே அமீருல் முஃமினீனைக் குறிக்க அமீர் எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதை முதலாவது ஆதாரம் தெளிவாக நிரூபிக்கின்றது.
இரண்டாவது ஆதாரம் சாதாரண ஒரு நிகழ்ச்சியல்ல. ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களுடைய உம்மத்தின் முதலாவது கலீபாவைத்தேர்வு செய்வதற்கு ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களுக்குப் பிறகு அன்னாரது உம்மத்தில் மிகச் சிறந்தவரான அபூபக்கர் (ரழியல்லாஹுஅன்ஹு) ஈமானாலும் அறிவாலும் நிரம்பிவழியும் உமர் (ரழியல்லாஹுஅன்ஹு), சுவனத்தைக் கொண்டு நன்மாறாயம் கூறப்பட்ட அபூஉபைதா (ரழியல்லாஹுஅன்ஹு), ஸஃத் (ரழியல்லாஹுஅன்ஹு) ஏனைய முக்கியமான நபித் தோழர்கள் ஒன்று கூடியிருந்த சந்தர்ப்பம் அது. கலீபாவைத் தேர்வு செய்வதற்காகவே ஒன்று கூடியிருந்த, கலிபாவைப் பற்றியே ஆலோசனை செய்துகொண்டிருந்த அத்தகைய சந்தர்பத்தில் இமாம் எனக் கூறாமல் அல்லது கலீபா எனக் கூறாமல் அங்கிருந்த யாவரும் அமீர் என முஸ்லிம்களின் ஒரே தலைவரைக் குறிப்பிட்டுக் கூறினார்கள். அது தவறு என்று தான பி.ஜெ. பித்தலாட்டம் பண்ணுகிறார். ஒரு வேளை அச்சந்தர்பத்தில் பி.ஜெ. இருந்திருந்தால் இப்படிக் கூறுவது தவறு என்பதை அங்கு கூடியிருந்த உத்தம நபித் தோழர்களுக்குத் தெளிவுபடுத்தியிருப்பார் போலும்? பி.ஜெ. அல்லாஹ்வைப் பயப்பட வேண்டாமா? இவர் போன்றோர் பற்றித்தான் அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு விபரிக்கின்றான்.
அவர்கள் (தங்கள்) மனோ இச்சையையும், வீண்சந்தேகத்தையும் அன்றி வேறு (எதனையும்) பின்பற்றவில்லை. (ஆனால்) நிச்சயமாக அவர்களது ரப்பிடமிருந்து நேர்வழி வந்தே இருக்கின்றது. (53:23)
குலபாக்களுடைய காலத்தில் முஸ்லிம்களின் ஒரே தலைவரை அமீர் எனக் குறிப்பிட்டதற்கான தெளிவான இரண்டு ஆதாரங்களை மேலே தந்துள்ளோம். அதற்கும் மேலாக ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களே அமீர் எனும் சொல்லை முஸ்லிம்களின் ஒரே தலைவருக்குப் பயன்படுத்தியுள்ளதை இங்கு உங்களுக்குத் தருகின்றோம். ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களுக்குப் பின் அவர்களது உம்மத்திற்கு ஏற்படக்கூடிய பல விடயங்களை அவர்கள் முன்னறிவிப்புச் செய்துவிட்டுச் சென்றார்கள். அதில் ஒரு முன்னறிவிப்பானது-
ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) கூறுகின்றார்கள்.
பன்னிரண்டு அமீர்கள் தோன்றுவார்கள். அவர்கள் அனைவரும் குரைஷ்வம்சத்தினின்றும் உள்ளவர்களாக இருப்பார்கள்.
(ஸஹீஹுல் புஹாரி-கி-அஹ்காம்)
இங்கு ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) முஸ்லிம்களின் ஒரே தலைவரைக் குறிக்க அமீர் எனும் வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்கள். இதன் பிறகும் முஸ்லிம்களின் ஒரே தலைவரை அமீர் எனக் குறுப்பிடுவதற்கு ஒரு முஸ்லிமுக்கு வேறு ஆதாரங்கள் அவசியமா?
சுய இலாபத்திற்காக இஸ்லாம் கதைக்கக் கூடிய பி.ஜெ. இந்த ஹதீஸில் முஸ்லிம்களின் ஒரே தலைவரைப் பற்றிக் குறிப்பிடப்படவில்லை என மழுப்ப முயற்சிக்கலாம். எனவே அதே பண்ணிரண்டு அமீர்களை கலீபாக்கள் எனும் வார்த்தையைக் கொண்டு அவர்கள் முஸ்லிம்களின் ஒரே தலைவர்தான் என்பதை சந்தேகமில்லாமல் கூறக்கூடிய ஹதீஸையும் இங்கு குறிப்பிடுகின்றோம்.
ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறுகின்றார்கள்-
நிச்சயமாக இந்த ஆட்சியதிகாரம் பண்ணிரண்டு ஹலீபாக்கள் கடக்கும் வரைக்கும் முடிவுறாது. அவர்கள் அனைவரும் குரைஷ் வம்சத்தினின்றும் உள்ளவர்களாக இருப்பார்கள்.
(ஸஹூஹ் முஸ்லிம்-கி-இமாரா)
ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) உடைய காலத்தில் அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்றே நபித்தோழர்கள் அழைத்தனர். அதுதான் கலீபா, இமாம், அமீர் போன்ற அனைத்து வார்த்தைகளை விடவும் சிறந்தது எனும் உண்மையை பி.ஜெ. யும் ஏற்றிருக்கின்றார். ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் பிறகு தோன்றிய முஸ்லிம்களின் ஒரே தலைவருக்கு ஆட்சியதிகாரம் இருந்தால் தான் அவரை இமாம் என்று கூறுவோம் என எந்தவொரு நபித்தோழரும் கூறுவில்லை. அதற்கு மாற்றமாக நபித்தோழர்களின் தலைவராகிய அபூபக்கர் (ரழியல்லாஹுஅன்ஹு) இமாம் எனும் சொல்லிற்கு கொடுத்த விளக்கத்தை இமாம் எனும் தலைப்பின்கீழ் மிகத்தெளிவாகத் தரப்பட்டுள்ளது. அதே போல் அவர்களில் எவரும் இமாமை அமீர் எனக் கூறமுடியாது என புதுக்கண்டுபிடிப்பு நடாத்தவும் இல்லை. உண்மை இப்படி இருக்க சத்தியத்தை மறுப்பதற்காக புதுப்புது கண்டுபிடிப்புகளை பி.ஜெ. வெளியிட்டது மட்டுமல்லாமல், அவை புதுக்கண்டுபிடிப்புக்களல்ல என மக்களை ஏமாற்றுவதற்காக பழைய இமாம் ஒருவரின் கூற்றைத் தனக்குத் தேவையான விதத்தில் பின்வருமாறு பயன்படுத்துகின்றார்.
இந்த விளக்கத்தை நாம் புதிதாகக் கண்டுபிடித்துவிடவில்லை என்பதையும் நாம் இங்கு தெரிந்தாக வேண்டும். புஹாரி இமாம் அவர்கள் இமாமுக்கு கட்டுப்படுதல் என்றதலைப்பில் ஒரு பாடத்தை புஹாரியில் இடம் பெறச்செய்துள்ளனர். ஆனால் அப்பாடத்தில் எடுத்துக்காட்டும் ஹதீஸ்கள் அமீரக்குக் கட்டுப்படுவதைத்தான் குறிக்கின்றன. இமாமுக்குக் கட்டுப்படுவதைப்பற்றி எந்த ஹதீஸையும் அப்பாடத்தில் கூறவில்லை.
இதற்கு விளக்கம் கூறும் போது ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
அப்பாடத்தில் இமாமுக்கு கட்டுப்படுதல் பற்றி ஒரு ஹதீஸையும் கூறாமல் இமாமுக்கு கட்டுப்படுதல் என்று தலைப்பிட்டுள்ளார். இதற்குக் காரணம் அமீர் என்பவர் இமாமால் நியமிக்கப்பட்டவர்தான் எனவே அமீருக்குக் கட்டுப்படுவது உண்மையில் இமாமுக்குக் கட்டுப்படுவது தான் இவ்வாறு ஹாபிழ் இப்னு ஹஜர் விளக்கமளிக்கின்றார்கள்.
(அல்முபீன 1999 மார்ச் - பக்கம் 23)
இங்கு இமாம் இப்னு ஹஜர் கூறக்கூடிய கருத்தாகிய இமாமே அமீர்களை நியமிப்பார் என்பது தவறு எனக் கூறுவதற்கில்லை. கேள்வி என்னவென்றால் அமீர்களை நியமிக்கக் கூடிய முஸ்லிம்களின் ஒரே இமாமை அமீர் எனக் கூறமுடியுமா என்பது தான். அது பற்றி இமாம் இப்னு ஹஜர் இங்கு எதுவுமே கூறாதிருக்கும் போது அவரது கூற்று பி.ஜெ. உடைய கற்பனையை எவ்வாறு உறுதிப் படுத்தும்? இது பிறரது கருத்தை தனது தேவைக்கேற்ப மாற்றியமைப்பதில்லையா?
மற்றொரு வகையில் பார்க்கும் போது நபித்தோழர்கள் எப்படி அமீர், இமாம் எனும் சொற்களை ஒரே பொருள் கொண்டதாக நம்பி இருந்தார்களோ அதே போல் தான் இமாம் புஹாரியும் நம்பியுள்ளார்கள் என்பதை பி.ஜெ. குறிப்பிடும் இமாம் புஹாரி இட்டுள்ள தலைப்பு தெளிவாக நிரூபிக்கின்றது. எனவே தான் பாவமில்லாத காரியங்களில் இமாமுக்குக் கட்டுப்பட வேண்டும் எனத்தலைப்பு இட்டு விட்டு, அமீருக்குக் கட்டுப்படுதலைக் குறிக்கக்கூடிய ஹதீஸ்களைக் குறிப்பிட்டுள்ளார்கள்.
இப்போது பி.ஜெ. யின் கற்பனைவாதம் புதிதா? இல்லையா? என்பதை நன்றாகவே தெளிவாகி இருக்கும் இத்தகைய மனோ இச்சை கூறும் கற்பனைகளை மார்க்கம் எனக் கூறி பி.ஜெ. யும் அவர் போன்ற தலைவர்களும் மக்களை வழிகெடுத்துக் கொண்டிருக்கின்றனர். எனவே மக்கள் அதனை நம்பி வழிகெடுவதற்கான வாய்ப்பு அதிகம் இதனால் தான் ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) பின்வருமாறு கூறினார்கள்.
நிச்சயமாக நான் எனது உம்மத்தினர் மீது பயப்படுவதெல்லாம் வழிகெடுக்கக்கூடிய தலைவர்களைப் பற்றியேயாகும்.
(திர்மிதி - ஸஹீஹ், ஸி.அ.ஸஹீஹா.1582)
- உலுல் அம்ர் என்போர் யார்?
விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபட்டு நடவுங்கள். (அவ்வாறே அல்லாஹ்வுடைய) தூதருக்கும் உங்களில் நின்றும் உள்ள அதிபருக்கும் வழிபட்டு நடவுங்கள். (4:59)
அம்ர் என்றால் அதிகாரம் என பி.ஜே கூறிவிட்டு அதுபற்றி எவ்விதத் தெளிவையும் விட்டுவிட்டார். அம்ர் எனும் வார்த்தைப் பற்றிய முழுமையானத் தெளிவு பொதுமக்களுக்குக் கிடைத்துவிட்டால பி.ஜே. யின் முயற்சி இங்கும் தோல்வியடைந்து விடும். அம்ர் எனும் சொல்லிற்கு இருக்கக் கூடிய பல பொருள்களில் அதிகாரம் என்பதும் ஒன்றாகும். ஆனால் அதிகாரம் என்றவுடன் ஆட்சியதிகாரம் மட்டும் தான் அதிகாரம் எனும பி.ஜே. யின் விளக்கம் தவறானது. அதிகாரம் எனும் போது அதன் அளவு வித்தியாசப்படும்.
ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) பின்வருமாறு கூறுகிறார்கள்.
முஸ்லிம்களின் விடயத்தைப் பொறுப்பேற்கும் எந்தவொரு அமீரும் பின்னர் அவர்களுக்காக பாடுபடாமலும், விசுவாசமாக நடக்காமலும் இருந்தால் (அவர்) அவர்களுடன் ஒன்றாக சுவனம் நுழைய மாட்டார்.
(ஸஹீஹ் முஸ்லிம்.கி. இமாரா)
முஸ்லிம்களுடைய விடயங்களை மாத்திரம் பெறுப்பேற்கக்கூடியவர் ஒருபோதும் ஆட்சியதிகாரம் கொண்டவரல்ல. ஆனால் முஸ்லிம்களை நிர்வாகிக்கக்கூடிய அதிகாரம் நிச்சயமாக அந்த அமீருக்கு உண்டு. அவ்வாறு நிர்வகிப்பவரை அமீர் எனவும் கூறப்படும் என்பதற்கு மேலுள்ள ஹதீஸ் நேரடியான ஆதாரமாகும். எனவே அம்ர் எனும் சொல்லுக்கு அதிகாரம் எனும் பொருள் உண்டு என்பதை வைத்து அது ஆட்சியதிகாரம் மாத்திரமே எனக்கூறுவது பி.ஜேயின் மோசடி என்பது இந்த ஹதீஸின் மூலம் தெளிவாகின்றது.
முஸ்லிம்களின் விடயங்களை பொறுப்பேற்று நிர்வாகிக்கக்கூடிய தலைவர் முஸ்லிம்களின் ஆட்சி இருந்தாலும் இல்லாவிட்டாலும் காணப்படுவது அவசியம் என்பதையும், முஸ்லிம்களின் விடயங்களை மாத்திரம் நிர்வகிக்கக்கூடிய தலைவரை அமீர் எனக் கூறலாம் என்பதையும் இந்த ஹதீஸ் நிரூபிக்கின்றது. இவற்றை வாசகர்கள் கவனத்திற் கொள்ள வேண்டும். ஏனெனில் இவ்விரண்டும் தவறு என்பதே பி.ஜேயின் தலைமைத்துவம் ஒர் ஆய்வு எனும் கட்டுரையின் உயிர்நாடியாகும்.
ஆட்சியதிகாரம் உள்ள அமீர் பற்றியும் ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்கள் இதோபோன்று தெளிவாக கூறியுள்ளார்கள்.
ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறுகின்றார்கள்:
அறிந்துகொள்ளுங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் கண்காணிப்பாளரே. அத்துடன் நீங்கள் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி கேட்கப்படக்கூடியோரே மனிதர்கள் மீது (பொறுப்பான) அமீர் கண்காணிப்பாளரே, அவர் தனது பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி கேட்கப்படுவர்...... (ஸஹீஹ் முஸ்லிம் - கி.இமாரா)
இவ்விரு ஹதீஸ்களில் இருந்தும் நிரூபணமாகக்கூடிய உண்மை யாதெனில் அம்ர் எனும் சொல்லிற்கு ஆட்சியதிகாரம் என பொருள் கொள்வது தவறு என்பதாகும். ஆம்ர் எனும் சொல் அதிகாரம் எனும் பொருளைத் தரக்கூடியது என்றாலும் அதிகாரம் எனக்கூறும் போது இஸ்லாமிய கண்ணோட்டத்தில் அது முஸ்லிம்களின் மீது மாத்திரம் அதிகாரம் செலுத்துவதாக இருக்கலாம் அல்லது முழுமனிதர்களையும் ஆட்சி செய்வதாகவும் இருக்கலாம். முஸ்லிம்களின் மீது மாத்திரம் அல்லது அனைத்து மனிதர்கள் மீதும் அதிகாரம் கொண்டவர்களைத் தலைவர்கள் எனும் பொருள் கொண்ட இமாம் அல்லது அமீh என அழைப்பதிலும் எவ்விதத் தடையும் இல்லை. இத்தகைய முஸ்லிம்களின் தலைவருக்குக் கட்டுபப்படுவது முஸ்லிம்கள் மீது கட்டாயக்கடமையாகும். இத்தகைய தலைவர்களைத் தான் உலுல்அம்ர் எனக்கூறி, அல்லாஹ் முஸ்லிம்களை நோக்கி அத்தகையவர்களுக்கு கட்டுப்படுமாறு கூறுகின்றான்.
- ஹதீஸ்களைத் திரிபு படுத்தல்
பி.ஜெ சத்தியத்தை ஏற்காது தான் இருக்கக்கூடிய வழிகேட்டை நிரூபிப்பதற்காக ஹதீஸ்களைக்கூட அவரது இந்த ஆய்வில் திரிபுபடுத்தியிருக்கின்றார். அவற்றை இங்கு குறிப்பிடுகின்றோம்.
1. நபி(ஸல்) அவர்கள் முஆத்தையும், அபூமூஸாவையும் யமனுக்கு (அமீர்களாக) அனுப்பிய போது நீங்கள் இருவரும் நளினமாக நடங்கள் கடுமையாக நடக்காதீர்கள். மக்களிடம் மகிழ்சியை உருவாக்குங்கள் வெறுப்பை உருவாக்கிவிடாதீர்கள். ஒருவர் இன்னொருவருக்கு இணங்கி நடங்கள். கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள் என்று அறிவுரை செய்தார்கள் (அறிவிப்பவர் – அபூபுர்தா ஆதாரம் - புஹாரி)
அந்த ஹதீஸில் ஒரே பகுதிக்கு ஒரே சமயத்தில் இரண்டு அமீர்களை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நியமித்துள்ளார்கள் என்பதை அறிய முடிகின்றது. (அல்முபீன் 1999- மார்ச் பக்கம்-20)
இங்கு பி.ஜெ ஒரே பகுதிக்கு ஒரே சமயத்தில் இரண்டு அமீர்களை ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்கள் நியமித்தார்கள் எனக்கூறுகின்றார். இது ஹதீஸிலே செய்யப்பட்டிருக்கும் மிகப் பயங்கரமான மோசடியாகும். சத்தியத்தை தோடும் ஒவ்வொருவரும் இதன் உண்மைத்தன்மையை விளங்கிக்கொள்ளும் பொருட்டு அச்சம்பவம் பற்றி பி.ஜெ குறிப்பிடும் அதே அறிவிப்பாளர் அறிவித்துள்ள தெளிவான அறிவிப்பை உங்கள் முன்வைக்கின்றோம்.
அபூபுர்தா கூறுகின்றார்கள்:
அபூமுஸா (ரலியல்லாஹூ அன்ஹூ), முஆத் பின் ஜமல் (ரலியல்லாஹூ அன்ஹூ) ஆகியோரை ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்கள் யமனுக்கு அனுப்பினார்கள். கூறுகின்றார்: அவ்விருவரில் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு மாநிலத்திற்கு அனுப்பினார்கள். கூறுகின்றார் யமன் இரு மாநிலங்களைக் கொண்டதாகும் பின்னர் (ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்கள்) கூறுகின்றார்கள்: இருவரும் (மக்களுக்கு) இலகுபடுத்துங்கள் சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள், மேலும் நன்மாரயம் கூறுங்கள் (பயம்காட்டி) வெருண்டோடச் செய்யாதீர்கள். பின்னர் ஒவ்வொருவரும் தத்தமது கடமையின்பால் சென்றனர். கூறுகின்றார்: அவ்வருவரில் ஒவ்வொருவரும் தனது (அதிகாரத்திற்குட்பட்ட) பூமியில் தனது நண்பருக்கு நெருக்கமாக வந்துவிட்டால் அவருடன் உறவை புதுப்பித்துக்கொள்வார். அவருக்கு ஸலாம் செல்வார். பின்னர் (ஒருமுறை) முஆத் (ரலியல்லாஹூ அன்ஹூ) தனது நண்பராகிய அபூமுஸா (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களை நெருங்கியதாக தனது பூமியில் வந்தபோது அவரிடம் தனது கேவேறு கழுதையில் வந்தார்கள். ஆப்போது மக்கள் புடைசூழ அவர்கள் அமர்திருந்தார்கள் அவரிடத்தில் ஒருவர் அவலது இரு கைகளும் கழுத்துடன் பிணைக்கப்பட்டவராக காணப்பட்டார். உடனே அவரிடம் அப்துல்லாஹ் இப்னு கைஸே! இவர் ஏன் இப்படி? என முஆத் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர் இவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதன் பிறகு நிராகரித்தவராவார் எனக்கூறினார்கள். (அவர்) கொல்லப்படும் வரை நான் இறங்கமாட்டேன் எனக்கூறினார்கள். அதற்காகத்தான் அவர் கொண்டுவரப்பட்டிருக்கிறார் நீர் இறங்குவீராக! எனக்கூறினார்கள் கொல்லப்படும்வரை நான் இறங்கமாட்டேன் எனக்கூறினார்கள். கொல்லும்படி ஏவப்பட்டது உடனடியாக கொல்லப்பட்டார். பின்னர் (மிருகத்தை விட்டும்) இறங்கினார்கள். (புஹாரி – கி.மகாஸீ)
உங்களுக்கு முன்னால் தரப்பட்டிருக்கும் ஹதீஸ் கூறும் உண்மைக்கும் பி.ஜெ திரிபு படுத்திக்கூறும் செய்திக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது? பி.ஜெ யை புரிந்து கொள்ளாதவர்கள் அவர் பற்றித் தெரிந்து கொள்வதற்கு இது சிறந்தவொரு சான்றாகும். தனது கற்பனையை நிரூபிக்க ஹதீஸையே திரிபுபடுத்துகின்றார். இது அல்லாஹ்வுடைய அச்சமுள்ளவர்கள் செய்யக்கூடிய செயல்தானா? ஏன்பதை வாசகர்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்.
எனவே ஒரே சமயத்தில் ஒரே பகுதிக்கு அதிகாரம் வகிக்கக்கூடியவர்களாக இருவரை ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்கள் நியமித்தார்கள் என எழுதியதில் எவ்வித உண்மையுமில்லை. இஸ்லாத்தின் அடிப்படைக்கே அது முரணானதுமாகும்.
2. உமர் பின் உபைதுல்லாஹ், ஷைபாவின் மகளை தல்ஹாவுக்கு நிகாஹ் செய்துவைக்க விரும்பினார். இதில் கலந்துகொள்வற்காக அபான் பின் உஸ்மானுக்கு அழைப்பு அனுப்பியிருந்நார். அப்போது அவர் ஹஜ் விவகாரத்துறைக்கு அமீராக இருந்தார். அறிவிப்பவர் – நபிஹ் பின் வஹப் ஆதாரம் - முஸ்லிம்
இந்த அறிவிப்பு ஒரு துறைக்கு அமீராக செயல்பட்டதைக் காட்டுகின்றது. இவையனைத்துமே கலீபாக்கள் காலத்தில் நடைபெற்றவை. (அல்முபீன் 1999- மார்ச் பக்கம்-22)
இங்கு பி.ஜெ முன்வைத்திருக்கும் சம்பவம் அவரது வாதத்தையே உடைத்தெரியக்கூடியதாகவும், இஸ்லாத்தின் விதிகளில் ஒன்றாகிய பிரயாணத்திலும் அமீர் நியமிக்கப்பட வேண்டும் என்பதை உண்மைப்படுத்தக் கூடியதாகவும் இருப்பதால் இங்கும் பி.ஜெ உண்மையை திரிபுபடுத்தியுள்ளார். ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்கள் பிரயாணத்திலும் கூட அமீர் நியமிக்கப்படவேண்டும் எனக் கட்டளையிட்டதுடன் நின்று விடாது அதனைச் செயல்படுத்தியும் காட்டியுள்ளார்கள். ஆமீரை நியமிக்காத எந்தவேறு பிரயாணக்கூட்டத்தையும் ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்கள் அனுப்ப மாட்டார்கள். இதற்கொரு உதாரணமாக பின்வரும் ஹதீஸைக் குறிப்பிடலாம்.
அபூஹூரைரா (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் கூறுகின்றார்கள்:
ஹஜ்ஜதுல் விதாவிற்கு முன்னர் ஹஜ் செய்யச்செல்லும் ஒரு கூட்டத்திற்கு அபூபக்கர் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களை ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்கள் அமீராக நியமித்து அனுப்பியபோது அறுத்துப்பலியிடும் தினத்தில் இந்த வருடத்திற்குப் பிறகு இணைவைக்கக்கூடி எவரும் ஹஜ் செய்யக்கூடாது எனவும், நிர்வாணமாக எவரும் அல்லாஹ்வின் வீட்டை வலம் வரக்கூடாது எனவும் மக்களுக்கு மத்தியில் அறிவிக்கும்படி கூறி அனுப்பினார்கள். (ஸஹீஹூல் புஹாரி- கி.மகாஸி)
பி.ஜெ குறிப்பிடும் சம்பவத்தில் ஹஜ் செய்யச்சென்ற பிரயாணக்கூட்டத்திற்கு அபான்பின் உஸ்மான் அமீராக இருந்தார் எனும் உண்மையை மறைப்பதற்குத்தான் அவர் அச்சம்பவத்தை திரிபுபடுத்தியிருக்கின்றார். அச்சம்பவத்தை விபரமாகத் தருகின்றோம். முதலில் பி.ஜெ குறிப்பிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு காணப்படுகின்றது:-
நபிஹ் பின் வஹாப் அறிவிப்பதாவது:
உமர் பின் உபைதுல்லாஹ் என்பவர் தல்ஹா பின் உமருக்கு ஷைபாவுடைய மகளை திருமணம் செய்துவைக்க நாடினார். ஆகவே அதில் கலந்துகொள்வதற்காக அபான்பின் உஸ்மானுக்கு அழைப்பு அனுப்பினார். அவர் அப்போது (அமீருல் ஹஜ்) ஹஜ்ஜிற்கு அமீராக இருந்தார். (ஸஹீஹ் முஸ்லிம் - கி.நிகாஹ்)
இங்கு (அமீருல் ஹஜ்) ஹஜ்ஜிற்கு அமீராக இருந்தார் என்பதை திரிபுபடுத்தி தனது சுயகருத்தை இஸ்லாத்தில் புகுத்துவதற்காக ஹஜ் விவகாரத்துறைக்கு அமீராக இருந்தார் என பி.ஜெ கூறுகின்றார். ஹஜ்ஜிற்கு அமீராக இருந்தார் என்பது ஹஜ் விவகாரத்துறைக்கு அமீராக இருந்தார் எனப் பொருள்படுமா..? ஒரு போதும் அமீருல் ஹஜ் என்பது அத்தகைய பொருளைக் கொடுக்காது பி.ஜெ அப்படி தவறுதலாக விளங்கி இருக்கலாம் என எவராவது சந்தேகம் கொண்டால் அத்தகைய நல்லெண்ணம் கொள்வதற்கும் இல்லை. ஏனெனில் அதே ஹதீஸ் நூலில் அதே அறிவிப்புடன் சேர்ந்ததாக இதற்கு விளக்கம் தரக்கூடிய அறிவிப்புக்கள் காணப்புடுகின்றன. அந்த அறிவிப்பைப் பாருங்கள்:
நபிஹ் பின் வஹாப் அறிவிப்பதாவது:
உமர் பின் உபைதுல்லாஹ் என்பவர் தனது மகனாகிய தல்ஹா பின் உமருக்கு ஷைபாவுடைய மகளை ஹஜ்ஜில் இருக்கும் போது திருமணம் செய்துவைக்க நாடினார். அந்நாளில் அபான்பின் உஸ்மான் (அமீருல் ஹஜ்) ஹஜ் செய்வோருக்கு அமீராக இருந்தார். (ஸஹீஹ் முஸ்லிம் - கி.நிகாஹ்)
இதன் பிறகும் பி.ஜெ உண்மையை திரிபுபடுத்தவில்லை. தவறு நேர்ந்திருக்கின்றது என நல்லெண்ணம் கொள்ள முடியுமா...? எனவே பி.ஜெ ஹதீஸ் எனக்கூறினால் அதனை ஆழமாக ஆராயாமல் நம்ப முடியுமா..? பி.ஜெ ஹதீஸ்களை திரிபுபடுத்தியுள்ளார் என்பதற்கு அவரது இந்த ஆய்வில் காணப்படும் இரண்டாவது சான்று இதுவாகும்.
இவ்வாறு பி.ஜெ ஹதீஸ்களையும், உண்மைச்சம்பவங்களையும் திரிபுபடுத்தவேண்டிய தேவை ஏன் ஏற்படுகின்றது என்றால் பி.அஜ முன்வைக்கக்கூடிய கருத்தில் எவ்வித உண்மையுமில்லை. இல்லாத ஒன்றை நிரூபிப்பதனால் இத்தகைய செயல்கள் இன்றி நேர்மையாக அதனை நிரூபிக்க முடியாது என்பது யாவரும் அறிந்ததே.
மேற்படி சம்பவத்தில் அதனை ஆதாரமாக முன்வைத்த பி.ஜெயிற்கே எதிரான மூன்று உண்மைகள் இருக்கின்றன. பிரயாணத்தில் கூட அமீர் நியமிக்கப்பட வேண்டும் என்பது முதலாவது. ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்கள் ஹஜ்ஜிற்குச்சென்ற குழுவினருக்கு அபூபக்கர் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களை அமீராக நியமித்தது இரண்டாவது. அபான் பின் உஸ்மான் ஹஜ் செய்வோருக்கு ஹஜ்ஜன்போது அமீராக இருந்தது மூன்றாவது. இந்த மூன்று விடயங்களும் ஒன்று மற்றொன்றை உறுதிப்படுத்துகின்றன.
- நரகின்பால் அழைக்கக்கூடிய பிரிவுகள் நபி (ஸல்) அவர்களின் வழித்தோன்றல்கள்?
மேற்காணப்படும் ஹதீஸில் முன்னறிவிப்புச் செய்யப்பட்ட நிலை தற்போது அப்படியே காணப்படுகின்றது. எனவே சுவனம் செல்ல ஒருவர் இன்று விரும்பினால் அவர் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களது கட்டளைப்படி ஜமாஅதுல் முஸ்லிமீனையும், அவர்களின் இமாமையும் பற்றிப் பிடித்துக் கொள்ளவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கூற முடியாது. உண்மை இப்படி இருக்க இந்த ஹதீஸ் பி.ஜெயின் முன்னால் வைக்கப்பட்டபோது இதன் பொருளை மாற்றுவதற்காக பின்வருமாறு முயற்சி செய்கிறார்:-
நபி (ஸல்) அவர்களின் பரம்பரையில் வந்து, நபியவர்களின் வழியைக் கடைப்பிடிக்காத ஒருவராலேயே இந்தக் குழப்பம் ஏற்படும் என்ற முன்னறிவிப்பே இந்த ஹதீஸ் என்று உணரலாம். (அல்ஜன்னத்-ஏப்.1993:15)
பின்வரக்கூடிய ஹதீஸின் ஆரம்பப் பகுதியைமாத்திரம் எடுத்துக்காட்டி பி.ஜெ இம்முயற்சியைச் செய்கிறார். இது ஹதீஸிலே செய்யப்பட்டிருக்கும் மிகத்தெளிவான மோசடியாகும். ஏனெனில் பி.ஜெ குறிப்பிட்டிருக்கும் முன்னறிவிப்பிற்கும் இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் முன்னறிவிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பல விடயங்களைக்கொண்டு இதனைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். பி.ஜெ குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸ் இதோ :-
எனது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரால் குழப்பம் ஏற்படும். அவர் என்னைச் சேர்ந்தவர் எனக்கூறுவார்.(ஆனால் அவரோ) என்னைச்சார்ந்தவர் அல்ல. நிச்சயமாக அல்லாஹ்வை அஞ்சக்கூடியோரே எனது நேசர்களாவர். பின்னர் யாவரும் விலா எழும்புகள் ஒன்றுபட்டிருப்பது போல் ஒரு மனிதரின்கீழ் ஒன்று படுவார்கள். பின்னர் குருட்டுத்தனம் தோன்றும். இந்த உம்மத்திலுள்ள யாவரையும் அது ஆட்கொண்டு விடும். முடிந்து விட்டது என நினைத்தால் மீண்டும் உருவெடுக்கும். அப்போது காலையிலே முஃமினாக இருக்கக்கூடியவன் மாலையாகும் போது காபிராகிவிடுவான். இறுதியில் மனிதர்கள் இருக்கூட்டமாக ஆகிவிடுவார்கள். எவ்வித நயவஞ்சகமும் அற்ற விசுவாசிகள் கூட்டம், விசுவாசமே அற்ற நயவஞ்சகர்கள் கூட்டம். அந்நிலை உங்களுக்கு ஏற்பட்டால் அந்த நாளில் அல்லது அடுத்த நாளில் தஜ்ஜாலை எதிர்ப் பாருங்கள். (அபூதாவூத்-கி.பிதன்:3568,ஸஹீஹ்)
இந்த ஹதீஸிலே ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களது வழித்தோன்றலில் இருந்து குழப்பத்தைத் தோற்றுவிக்கக்கூடியவர் தஜ்ஜால் தோன்றுவதற்கு மிக நெருக்கமாகவே தோன்றுவார் எனக்கூறப்பட்டுள்ளது. நேர்வழி பெற்ற ஹலீபா ஒருவரது (இமாம் மஹ்தியினது) ஆட்சியில் தஜ்ஜால் தோன்றும்போது ஈஸா (அலை) தோன்றி தஜ்ஜாலைக் கொன்றுவிடுவார்கள். அதன்பிறகு முழு உலகிலும் இஸ்லாமிய ஆட்சி தோன்றும். ஆனால் மேலேயுள்ள ஹதீஸ் பிரிவுகள் காணப்படக்கூடிய எல்லாக் காலத்திற்கும் உரியதாகும். மேலும் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களது வழித்தோன்றலில் தோன்றக்கூடிய குழப்பவாதி ஒருவரேயாவார் என இந்த ஹதீஸ் கூறுகின்றது. மேலேயுள்ள ஹதீஸ் நரகின்பால் அழைக்கக்கூடிய பல அழைப்பாளர்கள் இருப்பார்கள் எனக்கூறுகின்றது.
மேலும் இன்று இருக்கும் நரகின்பால் அழைக்கும் பிரிவுகள், இயக்கங்கள் எல்லாம் அவர்கள் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களது வழித்தோன்றல் எனக்கூறி மக்களை வழிகெடுப்பதுமில்லை. எனவே பி.ஜெ குறிப்பிடும் இறுதிக் காலத்தில் தோன்றக்கூடிய குழப்பவாதி பற்றிய ஹதீஸிற்கும். நரகின்பால் அழைக்கக்கூடிய பல பிரிவுகளும் சுவனம் செல்லக்கூடிய ஜமாஅதுல் முஸ்லிமீனும் காணப்படக்கூடிய காலங்களைக் குறிக்கும் ஹதீஸிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. எனவே நேர்வழி பெற்று சுவனம் செல்ல நினைக்கும் ஒருவர் இன்றைய காலத்தில் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களது கட்டளைப்படி ஜமாஅதுல் முஸ்லிமீனில் இணைவதைத் தவிர வேறு வழி கிடையாது.
- பி.ஜெ யின் கேள்விகளும் அவற்றிற்கான பதில்களும்.
தங்களை அமீரென்று சொல்லக்கூடியவர்கள் முழுமையான ஆட்சியதிகாரம் படைத்த மன்னர் என்ற கருத்தில் அமைந்த கலீபா, இமாம், சுல்தான், மலிக், அமீருல் முஃமுனீன், அமீருல் ஆம்மா என்ற பொருளில் தங்களை அமீர் என்று சொல்லிக்கொள்கின்றார்களா? அல்லது மன்னர்களால் பல பகுதிகளுக்கு பல பணிகளுக்காக நியமிக்கப்பட்ட அமீர் என்று தங்களை சொல்லிக் கொள்ளப்போகின்றார்களா? (அல்முபீன் 1999 மார்ச் - பக்கம் 33)
பதில் :-
கேள்விக்குப் பதிலளிக்கு முன் கேள்வியில் உள்ள தவறை அறிந்துக் கொள்ளுங்கள். அமீர் எனும் சொல் அதிகாரம் படைத்த மன்னர் எனும் பொருளைக் கொண்டது என கேள்வியில் குறிப்பிடப்பட்டிருப்பது மிகப் பெரிய தவறாகும். விபரமாக முன்னால் முன்னால் விளக்கப்பட்டுள்ளது.
சுவனம் செல்லக் கூடிய ஒரேகூட்டமாகிய ஜமாஅதுல் முஸ்லிமீன் முஸ்லிம்களின் ஒரே தலைவரை அமீர் இமாம் எனக்குறிப்பிடிகின்றது.
முஸ்லிம்களின் விடயங்களைப் பொறுப்பேற்கக்கூடியவரை எவ்வாறு ரஸூலுல்லாஹி (ஸல்) அமீர் எனக் குறிப்பிட்டார்களோ அதே போன்று ஜமாஅதுல் முஸ்லிமீனை வழிநடாத்தக் கூடிய தலைவரை அமீர் என முஸ்லிம்கள் கூறுகின்றனர்.
எந்த இமாம் இன்றி மரணிப்பதை இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட (ஜாஹிலிய்ய) மரணம் என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்களோ அந்தப் பொருளில் சுவனம் செல்லக்கூடிய ஒரே கூட்டமாகிய ஜமாஅதுல் முஸ்லிமீன் தமது தலைவரை இமாம் எனக்கூறுகின்றது.
அமீர் என ஒருவரைக் குறிப்பிடுவதற்கு அவருக்கு மேலே ஒரு இமாம் இருந்தேயாகவேண்டும் என்பது பி.ஜெ யின் ஆதாரமற்ற மனோ இச்சைப்படியான வாதம் என்பது முன்னால் நிரூபிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மன்னர்கள் சில பனிகளுக்காக அமீர்களை நியமித்தார்கள் என்பதும் தவறு. பணியாளர் எனும் பொருள் கொண்ட ஆலிம்களை நியமித்தார்களேயன்றி. தலைவர் எனும் பொருளுடைய அமீர்களைப் பனிகளுக்காக நியமிக்கவில்லை. எங்கெல்லாம் அமீர் நியமித்தார்கள் எனக்கூறப்பட்டுள்ளதோ அங்கு அந்த அமீரின் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு மக்கள் கூட்டம் காணப்படும். அப்படி இல்லாமல் ரஸூலுல்லாஹி (ஸல்) எவரையும் அமீர் என ஒரு போதும் குறிப்பிடவில்லை.
கேள்வி 02:-
அமீருக்கு அமைச்சர்கள் உண்டு எனப் பார்த்தோம். இந்த இயக்கங்களின் அமீர்களுக்கு ராணுவ அமைச்சர் யார்? உள்துறை அமைச்சர் யார்? என்று கேட்கவேண்டும். அதெல்லாம் இல்லை என்றால் நீங்கள் அமீரும் இல்லை என்று கூறிவிடலாம். (அல்முபீன் 1999 மார்ச் - பக்கம் 35)
பதில் :-
அமைச்சர்கள் இருந்தால்தான் ஒருவர் அமீர் எனக் குறிப்பிடலாம் என்பதற்கு என்ன ஆதாரத்தை பி.ஜெ முன்வைத்துள்ளார்? அமீருக்குரிய நிபந்தனையாக அவருக்கு அமைச்சர்கள் இருக்கவேண்டும் என அறபுமொழியில் காணப்படுகின்றதா? குர்ஆன், ஹதீஸில் காணப்படுகின்றதா? குறைந்தபட்சம் உலக நடைமுறையாவது இதற்கு சான்று பகர்கின்றதா?
ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-
மூன்று நபர்கள் பிரயானத்திலிருந்தாலும் (அவர்கள்) தங்களில் ஒருவரை அமீராக்கிக் கொள்ளட்டும். (பஸ்ஸார்-ஸஹீஹ்)
இது ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் கூற்றாகும். இதுபோன்று இன்னும் சில அறிவிப்புகள் முன்னால் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அமைச்சர்கள் இல்லாவிட்டால் அவர் அமீரேயல்ல என்பது உண்மையானால் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அதுபற்றித் தெரியாமல் இருந்தார்களா...? பி.ஜெ தனக்குத்தெரியாதது எதுவும் இல்லை எனும் இறுமாப்பைவிட்டு, தவ்பாச்செய்து சத்தியத்தை ஏற்றுக்கொண்டால் முஸ்லிமாக இருப்பார். வரட்டு கௌரவத்திற்காக வழிகேட்டில் அடம்பிடித்தால் மறுமைநாளில் முழு மனிதர்களுக்கு மத்தியிலும் கேவலப்பட வேண்டி ஏற்படும். உண்மை என்னவெனில் அமீர் என்பவருக்கு மொழி ரீதியாகவோ, ஷரீஅத் ரீதியாகவோ அமைச்சர்கள் இருக்கவேண்டும் என்பது ஒரு நிபந்தனையே அல்ல என்பதேயாகும்.
- பி.ஜெ யும்! சந்தர்ப்ப வாதமும்!
தப்லீக், ஜமாஅதே இஸ்லாமி, ஜாக், ஜமாஅதுல் முஸ்லிமீன், சிம், அஹ்லே ஹதீஸ், முஜாஹித், ஸலஃபி போன்ற ஏராலமான அமைப்புகள் தங்கள் தலைமை இஸ்லாமிய தலைமை எனக் கூறுகின்றன. அமீருக்குக்கட்டுப்படுதல் பற்றி ஆதாரங்களை எல்லாம் எடுத்துக்காட்டி தங்களுக்குக் கட்டுப்படுவது மார்க்கக்கடமை என்கின்றனர். முன்னர் நாம் சுட்டிக்காட்டிய அமைப்புகள் இஸ்லாமிய தலைமை அல்ல எனவும் கூறுகின்றனர். (அல்முபீன் 1999 மார்ச் - பக்கம் 53)
நாம் கூறுவது என்னவென்றால் தங்களால் இயன்ற அளவுக்கு அவர்கள் செயல்படட்டும். ஆனால் இதுதான் இஸ்லாமியத் தலைமை. இவர்தான் அமீர் எனக்கூறி மக்களை ஏமாற்ற வேண்டாம். அமீருக்குக் கட்டுப்படுதல் என்பது தம்மைப் போன்றவர்களுக்குக் கட்டுப்படுவதுதான் எனவும் வாதிட வேண்டாம்.
(அல்முபீன் 1999 மார்ச் - பக்கம் 53)
மக்கள் சிந்திக்க வேண்டியது ஜாக் எனும் பிரிவில் முன்நின்றி ஏறக்குறைய ஒரு தசாப்தமாக மக்களை ஏமாற்றிக்கொண்டுத்தான் பி.ஜெ இருந்தாரா? அரசியல் தலைமைத்துவ ஆசையில் பி.ஜெ தற்போது ஏற்படுத்தியிருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் எனும் பிரிவை இவ்வாறு புகழ்கின்றார்:-
முஸ்லிம் லீக், தேசிய லீக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மக்கள் ஜனநாயகக்கட்சி, முஸ்லிம் மஜ்லிஸ் போன்ற அமைப்புகள் தங்கள் தலைமையை இஸ்லாமியத் தலைமை என்று கூறுவதில்லை. இந்த நாட்டில் எந்த அளவுக்கு சக்தி இருக்கின்றதோ அந்த அளவுக்கு நாம் செய்து கொண்ட ஏற்பாடு என்று பகிரங்கமாகக் கூறுகின்றனர். அந்தவகையில் இவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
(அல் முபீன் 1999 மார்ச் - பக்கம் 52)
இப்போது பி.ஜெ உருவாக்கியிருக்கும் கட்சிதான் த.மு.மு.க (தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்) ஜாக் எனும் பிரிவு மக்களை ஏமாற்றுவதாகக் கூறுகிறார். அது பற்றி 1993ம் ஆண்டு என்ன கூறியுள்ளார் என்பதையும் பாருங்கள்:-
நாம் ஒரு கூட்டமைப்பாக அமீரை ஏற்படுத்தி குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இயங்கி வருகிறோம். இது முஸ்லிம்களின் கூட்டமைப்பு அல்ல எனக் கூறப்போகிறீர்களா? (அல் ஜன்னத்-ஏப்ரல்-93)
ஜாக் எனும் பிரிவுப்பெயருக்கு மாற்றமாக ஹதீஸில் காணப்படும் ஜமாஅதுல் முஸ்லிமீன் எனும் பெயரே பயன்படுத்தப்பட வேண்டும் எனும் ரீதியில் கேட்ட கேள்விக்குத்தான் பி.ஜெ மேற்கண்டவாறு பதில் கூறியுள்ளார். பின்னர் அதற்கு ஒரு தலைமையை உருவாக்குவது பற்றிய ஹதீஸை மேற்கோள்காட்டி எச்சரித்துமுள்ளார்.
1993ல் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அமீரை ஏற்படுத்தி கூட்டமைப்பாக இயங்கியதாகக் கூறிய பி.ஜெ இன்று அந்த ஜாக்கை ஏமாற்று எனக் கூறக் காரணம் ஜமாஅதுல் முஸ்லிமீன் குர்ஆனிலிருந்தும் ஹதீஸிலிருந்தும் முன்வைக்கும் ஆதாரங்களுக்கு ஈடுகொடுக்க முடியாததனாலா? அன்று தங்கள் தலைவரை அமீர் எனக்கூறிக்கொண்டது அறபு மொழிக்கு மாற்றமான, ஹதீஸிக்கு மாற்றமான இன்றைய புது ஞானம்(?) இல்லாதிருந்ததனாலா...?
உண்மை என்னவெனில் மத்ஹபுவாதிகளை வழிகேடு என நிருபித்தது போன்று உண்மையிலேயே குர்ஆனையும் ஹதீஸையும் சொல்மூலமும், செயல்மூலமும் முன்வைக்கக்கூடிய முஸ்லிம்களையும் மட்டம் தட்டிவிடலாம் என பி.ஜெ ஆரம்பத்தில் நினைத்து, இஸ்லாம் கூறக்கூடிய அமீருக்குக் கட்டுப்பட்டு சுவனம் செல்லும் ஒரே கூட்டம் நாமே, ஜமாஅதுல் முஸ்லிமீன் எம்மை விட்டும் பிரிந்ததனால் அவர்கள் கூட்டமைப்பை விட்டும் பிரிந்து சென்றவர்கள் என நிரூபிக்க முயற்சி செய்தார். அது சாத்தியப் படவில்லை.
குர்ஆனும் ஹதீஸூம் கூறக்கூடிய முழுமையான இஸ்லாத்தை ஜமாஅதுல் முஸ்லிமீன் தெளிவான ஆதாரங்களுடன் முன்வைத்ததும் மத்ஹபுவாதிகளை வழிகேடு என அவர் நிரூபித்தது போன்று அவரும் வழிகேடர் என்பது பகிரங்கமாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் முன்னர் அமீருக்குக் கீழ் செயல்பட்டதை மாற்றி ஆட்சியதிகாரம் இல்லாமல் அமீரே கிடையாது எனும் புதுக்கண்டுபிடிப்பு. அதுவும் இப்போது எவ்விதப் பெறுமதியும் அற்ற சுயகருத்து என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டு விட்டது. இனி மற்றுமொறு கண்டுபிடிப்பை எதிர் பார்க்கலாம்.
- பி.ஜெ யின் அபாண்டங்களும், ஜாஹிலிய்யக் கருத்துக்களும்!
அமீருல் முஃமினீன் என்ற பொருளில் தங்களை இவர்கள் அமீர் என்று கூறுவார்களேயானால் அது நகைப்பிற்குரியது என்பதில் என்தச் சந்தேகமும் இல்லை. ஏனெனில் அகில உலகத்தையும் அடக்கியாளுகின்ற எந்த அதிகாரமும் இவர்களிடம் இல்லை. (அல்முபீன் - மார்ச் 1999 பக்கம் 34)
தெளிவு :
இது எந்த அளவு அறிவீனமான கூற்று என்பதை புத்தியுள்ள ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளலாம். ரஸூலுல்லாஹி (ஸல்) உட்பட அவர்களது உம்மத்தில் தோன்றிய எவருக்குமே முழு உலகத்தையும் அடக்கியாளும் அதிகாரம் இருக்கவில்லை. அப்படி இருக்கும்போது முழு உலகையும் அடக்கியாளும் அதிகாரம் இல்லை என்பதைக்கூறி ஒருவரை அமீர் அல்ல எனக்கூறுவது எவ்வளவு பெரிய அறியாமை. சத்தியத்தை மறுப்பவர்களிடமிருந்து அறியாமைத்தனமான கருத்துக்கள் வெளிப்படுவது இயல்பே.
அறியாமை 2 :
எல்லா முஸ்லிம்களிடமும் வேண்டாம். தன்னுடைய அமைப்பின் கீழ் உள்ள உறுப்பினர்களிடத்திலாவது முறைப்படி ஜகாத்தை எடுத்;து ஏழைகளுக்கு வழங்குகின்றார்களா? தர மருப்பவர்களுடன் போர் செய்ய இவர்களால் முடியுமா? நிச்சயமாக முடியாது. (அல்முபீன் - மார்ச் 1999 பக்கம் 34)
தெளிவு :
பி.ஜெ இருக்கக்கூடிய நரகம் செல்லக்கூடிய பிரிவுகளில் அவர் கூறும் நிலை காணப்படலாம். அல்லாஹ்வின் அருளைக் கொண்டு சுவனம் செல்லக்கூடிய ஒரே கூட்டமாகிய ஜமாஅதுல் முஸ்லிமீனிலே இருக்கும் முஸ்லிம்களிடமிருந்து உரிய விதத்தில் ஸகாத் அறவிடப்பட்டு, உரியவர்களுக்கு அது பங்குவைக்கப்படுகின்றது. அவர்களோடு போராட வேண்டிய அவசியமே ஏற்படுவதில்லை.
அறியாமை 3 :
கைது செய்யும் அதிகாரம் அமீர்களுக்கு உண்டு என்று ஹதீஸ்களில் இருந்து அறிந்தோம். நமது அமீர்களிடத்தில் போய் இஸ்லாத்திற்கு மாற்றமாக நடப்பவர்களைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கச் சொல்வோம். அவ்வாறு அவர் செய்துவிட்டால் அவரை அமீர் என்று மனப்பூர்வமாக ஒத்துக் கொள்ளலாம். (அப்போது அவரை நியமித்த இமாம் இருக்க வேண்டும்) ஆனால் இங்குள்ள நிலைமை என்ன? தாங்கள் கைதாகிவிடக் கூடாது என்று அஞ்சி ஓடி ஒளிந்து கொள்ளும் நிலையில்தான் அமீர்கள் என்று கூறிக்கொள்வோர் இருக்கின்றார்கள்.
(அல்முபீன் - மார்ச் 1999 பக்கம் 35)
தெளிவு :
இஸ்லாமிய கொள்கைக்கு முரணாக ஆன்மீகத் தலைமை, அரசியல் தலைமை என இரண்டாகப் பிரித்த பி.ஜெ அவ்விரு தலைமைத்துவமும் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடமும், பனூஇஸ்ரவேலர்களின் நபிமார்களிடமும் இருந்ததாகக் கூறுகின்றார். அரசியல் தலைமையைக் கொண்டிருந்த ரஸூலுல்லாஹி (ஸல்) முஷ்ரிகீன்களுக்கு எந்த அளவு பயந்திருந்தார்கள் என்பதைப் பாருங்கள் :-
'நீர் குர்ஆன் ஓதுவதை மிக சப்தமிட்ட ஓதவும் வேண்டாம். அதனை மிகவும் மெதுவாகவும் ஓதவும் வேண்டாம்' எனும் அல்குர்ஆனிய வசனம் சம்பந்தமாக இப்னு அப்பாஸ் கூறும்போது ரஸூலுல்லாஹி (ஸல்) மக்காவிலே (இஸ்லாத்தை வெளிபடுத்த முடியாமல்) மறைவாக இருந்தபோது (இவ்வசனம்) இறங்கியது. ரஸூலுல்லாஹி (ஸல்) தனது தோழர்களுக்குக் தொழுவித்தால் அல்குர்ஆனை சப்தமிட்ட ஓதுவார்கள். அப்போது இணைவைப்போர் அதனை செவிமடுத்தால், குர்ஆனையும் அதனை இறக்கியவனையும். அதனைக் கொண்டு வந்தவரையும் திட்டுவார்கள். அப்போது அல்லாஹ் தனது நபிக்கு 'நீர் குர்ஆன் ஓதுவதை மிக சப்தமிட்ட ஓதவும் வேண்டாம். அதனை மிகவும் மெதுவாகவும் ஓதவும் வேண்டாம்' எனக் கூறினான். (ஸஹீஹுல் புஹாரி)
நபியவர்கள் சப்தமிட்டு அல்குர்ஆனை ஓதமுடியாமல் இருந்தும் அரசியல் தலைவராக இருந்தார்கள் என்றால் முஸ்லிம்களின் விடயங்களை மாத்திரம் பொறுப்பேற்றிருக்கும் அமீர்கள் தாம் கைதாகி விடக்கூடாது எனும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வதில் என்ன தப்பிருக்கின்றது...? சிந்திக்க வேண்டாமா?
- இறுதியாக........!
ஆட்சியதிகாரம் உள்ள இமாமுக்கு கட்டுப்படுவது கடமை என பி.ஜெ கூறுகின்றார். இன்று உலகில் பல நாடுகளில் தங்களை முஸ்லிம்கள் எனக் கூறிக்கொள்ளக்கூடிய ஆட்சியளார்கள் இருக்கின்றார்கள். அவர்களில் ஒருவராக சஊதி அரேபியாவில் ஆட்சி அதிகாரத்துடன் கூடிய ஒரு இமாம் இருக்கின்றார். அவர் தன்னை பி.ஜெ கூறுவதுபோல் அமீருல் முஃமினீன் என்றுக்கூடக் கூறுகின்றார். ஆகவே பி.ஜெ யின் பார்வையில் இமாம் என்பதற்குத் தகுதியுள்ள அந்த இமாமுக்குக், பி.ஜெ பைஅத் செய்து, கட்டுப்பட்டு நடப்பது அவர் மீது கடமையாகின்றது. ஆனால் அதனைக்கூடச் செய்யவில்லை. ஆகவே பி.ஜெ யின் கருத்தின்படி பார்த்தாலும் அவர் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டு, ஜாஹிலிய்யத்திலேயே இருக்கின்றார். என்பது நிரூபணமாகின்றது. இங்கு சஊதி அரேபியாவும் இந்தியாவும் வெவ்வேறான நாடுகள் எனக்கூறித் தப்பமுடியது. ஏனெனில் இஸ்லாத்தில் முஸ்லிம்களுக்கு என ஒரே காலத்தில் இரண்டு இமாம்கள் இருக்க முடியாது. (இது பற்றி பி.ஜெ ஆசிரியராக இருந்து எழுதிய 1993 ஏப்ரலிற்கான அல்ஜன்னத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.) அவ்வாறே உலகில் ஒரு ஹலீபா இருக்கும்போது இஸ்லாமிய ஆட்சி நடக்கும் அந்த நாட்டிற்கு ஹிஜ்ரத்துச் செய்யாமல், அந்நிய ஆட்சியின் கீழ் பாவங்களைச் செய்துக் கொண்டு எவரேனும் வாழ்ந்தால் அவர் தங்கும் இடம் நரகமே என அல்லாஹ் கூறுகின்றார். (4:97)
சஊதி அரேபியாவை ஆட்சி செய்யும் இமாம் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றுவதில்லை எனக்கூறி மக்களை ஏமாற்றவும் முடியாது. சஊதி அரேபியா ஆட்சியாளரை ஒரு முஸ்லிம் என ஏற்றுக்கொள்ளும் பி.ஜெ அந்த ஆட்சியாளரிடத்தில் தெளிவான மூலம் நிரூபிக்கக்கூடிய குப்ரை காணாதவரை கட்டுப்படாதிருக்க முடியாது. (ஆதாரங்கள் பக்கம் 13)
ஜமாஅதுல் முஸ்லிமீன் சஊதி அரேபியாவில் இருக்கக் கூடிய இமாமை ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை எனும் சந்தேகம் வந்தால், இஸ்லாமியக் கண்ணோடத்தில் சஊதி அரேபியாவில் உள்ள இமாம், சுவனம் செல்லக்கூடிய ஜமாஅதுல் முஸ்லிமீனின் இமாம் அல்ல. முஸ்லிம்களின் இமாமிற்குரிய மிக முக்கியமான செயலாகிய அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு அந்த இமாம் தீர்ப்பளிப்பதே கிடையாது. குர்ஆனையும், ஹதீஸையும் மாத்திரமே சட்டக் கோவையாகக் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டிய அந்நாட்டில் ஐரோப்பிய சட்டங்களின் அடிப்படையில் நீதிமன்றங்கள் காணப்படுவது ஒன்றே அங்குள்ள இமாம் முஸ்லிம்களின் இமாம் அல்ல என்பதற்கு மிகப்பெரும் சான்றாகும். அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பளிக்காதவர்கள் நிராகரிப்பாளர்களே என அல்குர்ஆன் தீர்ப்பளிக்கின்றது. ஒரு இஸ்லாமிய ஆட்சி அமைந்துவிட்டால் அந்நிய ஆட்சிகளின் கீழ் உலகெங்கும் வாழும் முஸ்லிம்களை அழைக்க வேண்டியது அந்த ஆட்சியின் கடமையாகும். ஆனால் வருவோரையே தடை செய்யக் கூடியதாகவே சஊதி அரேபிய சட்டம் காணப்படுகின்றது. வட்டியை ஒழிக்க வேண்டிய நாட்டில் வட்டியில்லாத வங்கியே இல்லை எனும் நிலை. இத்தகைய பல்வேறு காரணங்களின் அடிப்படையில் சஊதி அரேபியாவில் இருக்கும் ஆட்சியாளர் ஜமாஅதுல் முஸ்லிமீனின் இமாமே அல்ல.
பி.ஜெ போன்ற வழிகெடுக்கக்கூடிய தலைவர்களை நம்பி எவராவது இதுவரைக்கும் சுவனம் செல்லக்கூடிய ஒரே கூட்டமாகிய ஜமாஅதுல் முஸ்லிமீனில் நுளையாமல், மக்களை நரகில் கொண்டு சேர்க்கக்கூடிய மத்ஹபுகள், தரீக்காக்கள், பிரினைவாத இயக்கங்கள் போன்றவற்றில் இருந்தால் உங்களை நரகிலிருந்தும் பாதுகாத்துக் கொள்வதற்காக உடனடியாக, நரகின்பால் அழைக்கக்கூடிய அனைத்துப் பிரிவுகளையும் விட்டு ஒதுங்கி ஜமாஅதுல் முஸ்லிமீனில் நுழைந்து விடுங்கள். அல்லாஹ் எம்மனைவரையும் வழிகெடுக்கக்கூடிய தலைவர்களிடமிருந்து பாதுகாத்து, நேரான வழியில் நிலைத்திடச் செய்தி, முஸ்லிம்களாகவே மரணிக்கக்கூடிய பாக்கியத்தையும் தந்தருள்வானாக! ஆமீன்.
அமீர் ஒர் ஆய்வு -பகுதி 1
No comments