திருமறையும் ஹதீஸும்
திருமறையும் ஹதீஸும்:
=======================
.
“குர்ஆன் என்பது இறைவன் அருளிய வேதம். அப்படியானால், ஹதீஸ் என்பது என்ன?”
.
இப்படி ஒரு கேள்வியைக் கேட்டு ஒரு பதிவேற்றம் போடப் பட்டிருந்ததைப் பார்த்தேன்.
.
கேள்விக்குப் பதில் கொடுத்தோர் பின்னூட்டத்தில் என்ன தான் சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கலாமென்று போனால், ஆளாளுக்கு இஷ்டத்துக்கு ஹதீஸ்களை ஏதோ கிள்ளுக் கீரை போல் கருதிப் பதிலளித்திருப்பதைப் பார்க்கும் போது நம் சமூகம் ஹதீஸ்களை எந்த அளவுக்குத் தரம் தாழ்த்திப் பார்க்க ஆரம்பித்துள்ளது என்பதைப் புரிய முடிகிறது.
.
திருக் குர்ஆன் மட்டும் தான் இஸ்லாத்தின் அடிப்படை என்பது போலவும், ஹதீஸ்கள் என்றால் ஏதோ சிலர் கண்டபடி எழுதிச் சென்ற கருத்துக்கள் போலவும் என்னென்னெ சித்தரிப்புக்கள்?
.
திருமறைக்கும் ஹதீஸ்களுக்கும் இடையில் பாகுபாடு கற்பிப்போர் முதலில் இஸ்லாத்தின் அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
.
திருக் குர்ஆன் எந்த இறைவனிடமிருந்து அருளப் பட்டதோ, அதே இறைவனிடமிருந்து தான் ஹதீஸும் அருளப் பட்டது. இரண்டும் ஒரே இறைச் செய்தியின் இரண்டு வடிவங்கள்.
.
ஹதீஸ் எனும் பதத்தின் அர்த்தம் “செய்தி” என்பதாகும். இறைவனிடமிருந்து திருத் தூதர் (ஸல்) அவர்களுக்கு “சுருக்கமான” வடிவில் அருளப்பட்ட இறைச் செய்தியே குர்ஆன். அந்தச் சுருக்கமான இறைச் செய்தியின் விரிவான வடிவமே ஹதீஸ்.
.
வேறு வார்த்தையில் கூறினால், குர்ஆன் என்பது இறைவன் கட்டளைகள் என்றால், அந்தக் கட்டளைகளை எப்படிப் புரிந்து செயல்படுத்த வேண்டும் என்பதைச் செய்முறை வடிவில் நபியவர்கள் செய்து காட்டிய முன்மாதிரி விளக்கமே ஹதீஸ்.
.
அடிப்படையில் குர்ஆன் என்பதும் ஹதீஸ் என்பதும் இரு வேறான விடயங்கள் கிடையாது. இரண்டும் ஒரே செய்தியின் இரு வடிவங்கள். இதை இறைவனே தன் திருமறையில் உறுதிப் படுத்தும் விதமாக திருக் குர்ஆனை “ஹதீஸ்” என்றும் குறிப்பிட்டுள்ளான்.
.
ஆக, ஒரே இறைச் செய்தியின் இரு வடிவங்களான குர்ஆன் / ஹதீஸ் ஆகிய இரண்டும் அதன் பூரண நிலையில் ஒரு மனிதனிடம் இருக்கும் போது மட்டுமே இறைச் செய்தியின் முழுமையான அர்த்தத்தை அவன் முறையாகப் புரிந்து கொள்ள முடியும்.
.
மாறாக, ஒன்றைப் புறக்கணித்து இன்னொன்றை மட்டும் தூக்கிப் பிடிக்கப் போனால், நிச்சயம் இஸ்லாத்தின் பல அர்த்தங்களைத் தவறாகப் புரியும் நிலையே ஏற்படும். இதுவே வழிகேடுகளுக்கும் வழிவகுத்து விடும்.
.
“குர்ஆனும், அது போன்ற இன்னொன்றும் எனக்குக் கொடுக்கப் பட்டுள்ளது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய நேரடி ஹதீஸ் வாசகமே இரண்டும் ஒரேயளவு முக்கியத்துவம் கொண்டவை என்பதை உறுதிப் படுத்தியுள்ளது.
.
எனவே, குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் இடையில் ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் விதமாகவோ, ஒன்றை சிரமேல் தூக்கி, மற்றொன்றைத் தரம் தாழ்த்தும் விதமாகவோ யாரும் விளக்கம் சொன்னால், அவர் நிச்சயம் இஸ்லாத்துக்கு மாற்றமான வழிகேட்டையே போதிக்கிறார் என்று அர்த்தம்.
.
இதன் நிறைகள் அனைத்தும் அல்லாஹ்வைச் சாரும்; குறைகள் அனைத்தும் என்னையே சாரும். அல்லாஹ்வே அனைத்தும் அறிந்தவன்.
.
No comments